ஒற்றை ஆட்சியாக சர்வாதிகாரப் பாய்ச்சலுடன் செயல்படும் பி.ஜே.பி. ஆட்சியை வரும் 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திட நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்முனைப்புக்கு இடமில்லாமல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அதில், வருகிற குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு - ஒருமித்த முடிவுடன் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிறுத்துவதுபற்றி, புதுடில்லியில் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவருமான மம்தா பானர்ஜி அவர்கள் கூட்டிய கூட்டத்தில், ஒரு சில எதிர்க்கட்சிகளைத் தவிர, பெரும்பான்மையாக பல முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க. போன்ற 17 கட்சித் தலைவர்கள் கூடி, ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது - இந்த அரசியல் சூழ்நிலையில், நாடு எதேச்சதிகாரத்தை நோக்கி பா.ஜ.க.வினால் சென்று கொண்டிருக்கும் நிலையில் மிக முக்கியமான ஒன்றாகும்.




குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தேவை!


இதில் இணையாத வேறு சில கட்சிகளும், முதலமைச்சர்களும்கூட - அவர்களுக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும், இலக்கும் இருக்குமேயானால், அவர்களும் இணையவேண்டும்.
பாய்ந்துவரும் சர்வாதிகார அலைகள் - தங்களுக்குக் கிடைத்த மிருக பலத்தினைப் பயன்படுத்தி, வாய்ப்பானவற்றை நடத்திக் கொள்ளும் வேதனையான சூழ்நிலையில், இந்த எதிர்க்கட்சிகளின் முயற்சி ஒரு சிறந்த தடுப்பணையாக அமையக் கூடும்! இவர்கள் நிறுத்தும் பொது வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்ற கேள்வியைவிட, வெற்றி பெற முழு உழைப்பையும், ஒத்துழைப்பையும் அளிப்போம் என்று கருதி, முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

2024 - மக்களவைத் தேர்தலுக்கும் முன்னோட்டமாக அமையுமே!


இந்த ஒற்றுமை - வருகின்ற 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் ஜனநாயகப் போர்வையில் நடைபெறும் எதேச்சதிகார - அரசமைப்புச் சட்ட விரோத ஆட்சியை மாற்றுவதற்கான அரிய முன்முயற்சியாக அது அமையக்கூடும்! சென்ற 2014, 2019 தேர்தல்களில் பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் என்பவை மிகப் பெரும்பான்மையல்ல; மற்ற எதிர்க்கட்சிகளைவிட, கூடுதல் என்ற கணக்கில்தான் வெற்றி. மக்களின் அதிருப்தி, இளைஞர்களின் விரக்தி, இல்லத்தரசிகளின் வேதனை; எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், மாநில அரசுகளின் உரிமைப் பறிப்புகள் - ஆளுநர்மூலம் தொல்லைகள் - விண்ணை முட்டும் விலைவாசி - பணவீக்கம் - இப்படி எத்தனை எத்தனையோ உண்டு.


2019 தேர்தல் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் மக்களவையில் துணை சபாநாயகர் (டெபுடி ஸ்பீக்கர்) பதவி நிரப்பப்படாமலேயே - மரபுப்படி எதிர்க்கட்சி உறுப்பினருக்குத் தரப்படவேண்டிய பதவி அது - எந்த ஊடகமும் இதுபற்றி கவலைப்படவே இல்லை! ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம் - ஜனநாயகத்தை பிரதமர் மோடி அரசு எப்படி நடத்துகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்! எதிர்க்கட்சிகளான 17 கட்சிகளுடன் ஏனைய கட்சிகளும் ஒரே அணியில் இணைவது அவசர அவசியம்!

எதிர்க்கட்சிகள் தன்முனைப்பைக் கைவிடுக!


தங்களை - தங்கள் கட்சிகளை முன்னிறுத்தாமல் - தன்முனைப்புக்கு விடை கொடுத்து, பொது லட்சியம் ஒரே அஜெண்டாவாக யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் தெளிவுடன் நடந்துகொள்வது பொதுத் தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பு உண்டு! மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிர்ப்பனவர்களாக இருந்தாலும், அவற்றைப்பற்றி இப்போது சிந்திக்காமல், 2024 பொதுத் தேர்தலுக்கு இது ஒரு நல்ல முன்னோட்ட முயற்சியாக அமையும். பலன்தரும் வகையில் வாய்த்துள்ள இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்!

‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் அணுகுமுறையைப் பின்பற்றலாம்!



தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படி 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் - உள்ளாட்சித் தேர்தல்கள் இவற்றில் அனைத்து எதிர்க்கட்சிகளை (கொள்கை ரீதியாகவும்கூட) அணைத்து அழைத்து வெற்றிக்கொடி பறக்கவிட்டு ‘திராவிட மாடல் ஆட்சியை’ நிறுவி, முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக உள்ளாரோ - அதுபோன்ற அணுகுமுறையை இப்போதும், இனிவரும் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் கடைப்பிடித்தால் - வெற்றி நிச்சயம்! பொது வேட்பாளராக முன்பு துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்ட சிந்தனையாளர் திரு.கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் பல தகுதிகளாலும் பொருத்தமான வேட்பாளர் - அவரையே பொதுநிலை வேட்பாளராகப் பரிசீலிக்கவேண்டும்.