அந்த நேர்காணலில், ''ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைகிறபொழுது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அஜந்தா சொல்லப்பட்டது. நாங்கள் இணையவேண்டுமென தொண்டர்கள்விரும்பினார்கள்.அந்த சூழ்நிலை அப்போது உருவாகி இருந்தது.


அப்போது இரட்டை தலைமை என்பது சரிவருமா என என்னை சந்தித்தவர்களிடம் நான் கேட்டேன். சரிவரும் என்றும், இணைந்து பணியாற்றினால் சரியாக இருக்குமென்றும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த 6 ஆண்டுகாலம் நான் அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் முழு ஒத்துழைப்புடன் பணியாற்றினேன். அந்த சூழ்நிலையில் இதுவரை எந்த பிரச்னையுமில்லை. ஆனால் திடீரென ஒற்றைத்தலைமை வேண்டுமென்ற குரலை தற்போது எழுப்பியிருக்கிறார்கள். 




ஒரு அறையில் பேச வேண்டியதை வெளியே கொண்டு வந்து விவாதத்துக்குரிய பொருளாக மாற்றி இப்போது அது போய்க்கொண்டிருக்கிறது. இது மிகப்பெரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டிய காலக்கட்டம். பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டுமே என்ற முடிவு பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் பொதுச்செயலாளர் எனக்கூறப்படுவது ஜெயலலிதாவுக்கு கொடுத்த மதிப்பு காலவதியாகும் நிலைதான். எந்த பிரச்னையும்  இல்லாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று சென்றுகொண்டிருந்த இது சிலரின் தூண்டுதலின் பேரில் ஒற்றைத்தலைமை என்ற பிரச்னை பூதகரமாக எழுந்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக தற்போது அதிமுக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதனை இப்படியே எடுத்துச்சென்று மிண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த வேண்டுமென்பதே தலையாய கடமை. தொண்டர்களுக்காக தொண்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. 


நான் தர்மயுத்தக்காலத்தில் சொன்னதுபோல தனிப்பட்ட நபருக்கோ, தனிப்பட்ட குழுவுக்கோ இந்த இயக்கம்சென்றுவிடக்கூடாது என்பதே எங்களின் தலையாய கொள்கை. பிரிந்து இணைகிறபோது என்ன அஜந்தாவை சொல்லி தொண்டர்களிடத்தில் ஒப்புதல் வாங்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  என்ற நிலையை எடுத்தோமோ அது தொடர வேண்டுமென்பதே என்னுடைய இன்றைய நிலை. ஏனென்றால் இருவரும் மனம்விட்டு பேசி பல்வேறு பிரச்னைகளை தீர்த்திருக்கிறோம்.அந்த நிலை தொடர வேண்டும். இபோது ஒற்றைத்தலைமை என்ற காரணகாரியங்களை என்னிடம் விவாதம் செய்யவில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எந்த வித அஜந்தாவும் இல்லாமல், என்னிடம் கலந்து பேசாமல் திடீரென இதனை பேச ஆரம்பித்தார்கள்.




பின்னர் பேசிக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டு பிறகும் வெளியே வந்து பேட்டியாக தெரிவித்ததால் இந்த மிகப்பெரிய பிரச்னை பூதாகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. மாறுபட்ட கருத்தை நான் தெரிவித்ததில்லை. இப்போதும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து கட்சியை இயக்கி மீண்டும் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியை  கொண்டு வரவேண்டுமென்பதே என் ஆசை. இரட்டைதலைமை எப்படி இருக்கிறதோ அது தொடர வேண்டும். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோருடன் இருந்த அனுபவம் வாய்ந்தவர்கள் அடங்கிய உயர் மட்டக்குழுவினர் முடிவை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கேட்டு செயல்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டுமெனபதே என்னுடைய நிலைப்பாடு'' என்றார்.