உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் நாளை இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஓபிஎஸ் பதில் மனு:


அந்த மனுவில்,  "அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்குழு விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதையும் ஏற்க முடியாது. ஈ.பி.எஸ்ஸின் இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பிரதிநிதி என்ற அடிப்படையில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. அதனால், எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது


இரட்டை இலை முடங்குமா?:


நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான  வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அடுத்ததாக இருதரப்பும்.  இரட்டை சிலை சின்னத்தை கேட்டால், சின்னம் முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஈபிஎஸ்-ன் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் காலவதியாகிவிட்டதால், கட்சி சின்னத்தை ஒதுக்க அவரால் பரிந்துரைக்க முடியாது என கூறப்படுகிறது.  


ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை:


இந்நிலையில், இடைதேர்தலில் அதிமுகவின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஈ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை, தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்கவில்லை என்பது உறுதியானது.


இடைக்கால நிவாரணம் கிடைக்குமா?


ஈபிஎஸ் தரப்பிலான அந்த மனுவில்,  பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் உள்ளிட்ட தேதிகளைக் கேட்டறிந்த நீதிபதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள் உத்தரவுகள் வரவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர். எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் வலியுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில், ஈபிஎஸ் சார்பிலான இடையீட்டு மனுவிற்கு ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தேர்தல் ஆணையமும் பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளது.