ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளரை அறிவித்துள்ளார் ஓபிஎஸ். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை எல்லா கட்சிகளும் அறிவித்து பிரசாரத்தில் இறங்கிவிட்ட நிலையில், ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்டுள்ள கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுகவில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கபப்டாமல் இருந்தது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது பாஜகவா அதிமுகவா என்ற முடிவு எடுக்கப்படாமலேயே 20நாள்களுக்கும் மேல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. தங்களது முடிவை ஓரிரு நாளில் தெரியப்படுத்துவோம் என்றும், அதுவரை அதிமுக காத்திருக்கலாம் தவறில்லை என்றும் பாஜக கூறியிருந்த நிலையில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிமனையையும் திறந்து வைத்துவிட்டது இபிஎஸ் தரப்பு.


பாஜக போட்டியிட்டால் விட்டுக்கொடுப்போம் இல்லையேல் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியிருந்த நிலையில், இன்று இபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவித்துவிட்டதால் தங்கள் தரப்பில் இருந்து செந்தில் முருகனை அறிவித்திருக்கின்றது ஓபிஎஸ் தரப்பு. இரண்டு தரப்பும் தங்களது வேட்பாளர்களை அறிவித்திருப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல்களில் அதிமுகவின் பலமே இரட்டை இலைச் சின்னம் தான் என்னும் நிலையில், அதற்கு ஊறு விளைவிக்கும் விதமாக இருவரும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதால் சின்னம் முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே சொந்தம் என்று இபிஎஸ் தரப்பு ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது. அதே சமயம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தனது பெயரே தேர்தல் ஆணைய பதிவில் இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் சொந்தமானது என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு இரு நாள்களில் வரவிருக்கும் நிலையில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என்ற நம்பிக்கையில் வேட்பாளரை இபிஎஸ் அணி அறிவித்திருப்பதாகவே தெரிகிறது. 


ஆனால், பாஜக தன் முடிவை அறிவிப்பதற்கு முன்பே இபிஎஸ் தங்கள் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ்சும் தங்கள் வேட்பாளரை அறிவித்திருக்கிறார். ஆனால் கூடவே அவர் சொல்லியிருக்கும் “பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரைத் திரும்பப் பெறுவோம்” என்ற வாக்கியம் தமிழ்நாடு அரசியலில் இதுவரை எந்த கட்சியுமே சொல்லியிறாதது. அதிமுக என்ற பெரிய கட்சிக்கு சொந்தம் கொண்டாடும் ஓபிஎஸ் இப்படி இறங்கிச் செல்வதை அவரது ஆதரவாளர்களே ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இருவரும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், இன்று இரவு டெல்லி செல்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான நிலவரங்களை மேலிட நிர்வாகிகளிடம் எடுத்துக்கூற இருக்கும் அவர், மேலிட ஆலோசனையின் படி அதிமுக எந்த அணிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்தோ அல்லது பாஜக போட்டியிடுவது குறித்தோ அறிவிப்பு வெளியாகும்.


ஒருவேளை பாஜக தன் வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில் ஓபிஎஸ் தன் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவார். ஆனால், இபிஎஸ் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, பாஜக போட்டியிடாமல் இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்கும் பட்சத்தில் ஓபிஎஸ்-சின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் பாஜக ஓபிஎஸ் தரப்பை ஆதரித்தால் இபிஎஸ் தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும், உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்தால் அதிமுக-பாஜக கூட்டணியின் நிலை என்ன என்பது குறித்து கேள்வியும் எழுந்துள்ளது.