தமிழ்நாடு அரசியல் களம் முழுக்க முழுக்க அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆளுங்கட்சியான திமுக ஒருபக்கம், எதிர்க்கட்சியான அதிமுக ஒரு பக்கம், அறிமுக கட்சியான தவெக ஒரு பக்கம், நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாம் தமிழர் ஒரு பக்கம் என ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். 

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்:

இந்த சூழலில், முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதாவின் விசுவாசி என்று பெயரெடுத்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசியலில் இருந்து காணாமல் போய்க்கொண்டே இருந்தார். அதிமுக-வை கைப்பற்றுவேன் என்று கூறிக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டால் போதும் என்ற நிலைக்கு மாறினார். அதிமுக - பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த தினகரன் இடம்பெற்ற நிலையில், தானும் உள்ளே சென்றுவிடலாம் என்று கருதிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு உள்ளே  நுழைய வாய்ப்பு அமையவில்லை. 

இந்த நிலையில், நேற்று பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், மதுரையில் அவர் நடத்த உள்ள மாநாட்டில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றும், அவர் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி வைக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியது. 

அதிமுக-விற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம்:

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு அதிமுக - பாஜக கூட்டணி பிரிவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால், விஜய் அவர்கள் கூட்டணியில் இடம்பெறவும் வாய்ப்பு இல்லை. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும், புதுக்கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டாலும் அவர் தன்னை வளர்த்து ஆளாக்கி, அடையாளம் காட்டிய அதிமுக-விற்கு எதிராகவே இந்த தேர்தலில் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சாதாரண டீக்கடைக்காரராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை சேர்மன், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று ஆளாக்கிய  அதிமுக-வை எதிர்த்து அவர் பரப்புரையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், ஜெயலலிதா இல்லாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 

யாருடன் கூட்டணி?

மதுரையில் நடக்கும் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? யாருடன் கூட்டணி சேரப்போகிறார்? போன்ற பல கடினமான சவால்களை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமைய உள்ளது.