தமிழகம் கலவர பூமியாகிவிட்டது. அதிமுகவுக்கு இரண்டே ஜாதி… ஆண் ஜாதி, பெண் ஜாதி - இராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
விலைவாசி ஏன் உயர்ந்தது - ஈ.பி.எஸ் விளக்கம்
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். இன்று ராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் விளாத்திகுளம் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார். ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘’இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதம் ஆகிறது. வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு விழிபிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின். திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள், ஆனால் வரிகளை எல்லாம் உயர்த்திவிட்டனர். மின்கட்டணம் குறித்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை, 67% உயர்த்திவிட்டனர். இப்படி மக்கள் மீது சுமை சுமத்துகின்ற அரசு தேவையா? அதிமுக ஆட்சி இருந்தபோது வறட்சி, புயல், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செயல்பட்டு விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். இன்று புயல் இல்லை, வெள்ளம் இல்லை, வறட்சி இல்லை, கொரோனா இல்லை ஆனால் விலை உயர்கிறது. காரணம் என்னவென்றால் பொம்மை முதல்வர்.
மக்களுக்கு சேவை செய்த இயக்கம் அதிமுக.
அண்மையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ஊழல் என்றார்கள், அதில் மேலும் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை, டாஸ்மாக் மட்டும்தான் செயல்படுகிறது. அதில் அதிக வருமானம். எனவே அதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம். மருத்துவத் துறையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 400 கோடி ரூபாயில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். ஏழைகள் நிறைந்த பகுதியில் அற்புதமான சிகிச்சை கிடைப்பதற்கு கொண்டுவந்தோம். இது ஒரு வரலாற்று சாதனை. இப்படி மக்களுக்கு சேவை செய்த இயக்கம் அதிமுக.
அதிமுக சாதனை சொல்லிக் கொண்டே போகலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 540 கோடி பெற்றுக்கொடுத்தோம். மீனவர்களுக்கும் நிறைய திட்டம் கொடுத்தோம். விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசல், மீன்பிடி தடைக்காலம் மானியம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் டீசல் மானியம் உயர்த்தப்படும். நான்காண்டுகளில் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களுக்கு 321 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளை கட்ட 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வர்தா புயல், ஒக்கி புயல் நிவாரணம் 5000 ரூபாய், இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், படகுகள், வலைகள் சேதத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய், 167 மீனவர்கள் இலங்கையில் மீட்பு, 806 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்தும், 96 பேர் ஈரான், 11 பேர் அபுதாபி, 28 பேர் கத்தார் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தமிழகம் அழைத்துவந்தோம். 85 கோடியில் 5000 வீடுகள் கட்டிக்கொடுத்தோம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை
மீனவர்களின் வாக்குகளைப் பெற ஏமாற்றுகிறார். மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம். அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 49 கோடி நிதி ஒதுக்கி திட்ட அறிக்கை தயாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கிடப்பில் போட்டு 17 கோடியில் கட்டி, கடைகளை எல்லாம் திமுகவினரே எடுத்துக்கொண்டனர். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான். ஆகவே தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்” என்றும் பேசினார்.