100 நாள் வேலை திட்டம் தொடர்பாக  கூறியிருந்த கருத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் சீமான் சொல்வது சரிதான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.


“விவசாயத்துக்கு ஆளே வராமல், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து பயனில்லை. விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் 100 நாள் திட்டத்தை ஒழிக்க வேண்டும் ,கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள், பெண்கள் பல்லாங் குழி ஆடுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை திட்டம் என்கிறார்கள், ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் கிடைப்பது இல்லை  என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார்.


அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் என்று கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சீமானின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில நாள்களுக்கு முன்பு ‘மன்னிப்பு கேள் சீமான்’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.






இந்நிலையில், ‘சீமான் சொல்வது சரிதான்’ என்று ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. “மரத்தடியில் பொழுபோக்கும் 100 நாள் வேலை பணியாளர்கள் உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை” மற்றும் 100 நாள் திட்ட முறைகேடுகள் தொடர்பான பழைய செய்திகளை இணைத்து, இந்த ஹேஷ்டேகை நாம் தமிழர் கட்சியினர் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலர், சீமானின் கருத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  ஒரு பக்கம்  மன்னிப்பு கேள் சீமான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.






“சீமான் சொல்வது சரிதான்” என்ற ஹேஷ்டேக் தமிழ்நாடு அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது. பிறகு இந்திய அளவிலும் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. திங்கள்கிழமை அதிகாலை வரை சுமார் 80,000 பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளனர். பிக்பாஸ், ஐ.பி.எல் பரபரப்புகளுக்கு மத்தியில் இந்த ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியதை நாம்தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.