விழுப்புரம் மாவட்டம்: தமிழகத்தில் எந்த குறையும் குற்றமும் சொல்ல முடியாத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்ததாகவும் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கட்ட பஞ்சாயத்து,தினந்தோறும் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு உள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 2,948 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 694 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 688 ஊராட்சிகளில் அடங்கிய 5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான ஆண் வாக்காளர்கள் 6,87,420 பேரும், பெண் வாக்காளர்கள் 6,96,115 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 158 பேரும் ஆக மொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் 31 தேர்தல் நடத்து அலுவலர்களும், 904 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஈடுபடுவார்கள். வேட்பு மனுக்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை 15ம் தேதி முதல் 22-ந் தேதி வரை பெறப்பட்டு பின்னர் வேட்புமனுக்களை பரிசீலனை செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரத்திலுள்ள கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடான ஆலோசனை கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஓ. எஸ் மணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்சுணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் 30 ஆண்டு காலம் அதிமுகவிற்கு வந்த சோதனைகளையும் திமுக செய்த சதி வேலைகளை முறியடித்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தரமான 6 லட்சம் பசுமை வீடுகள் அதிமுக ஆட்சியில் கட்டி கொடுக்கப்பட்டது. இந்திய அளவில் உயர்கல்வி 24 சதவீதத்தில் இருந்து 48 சதவீதம் உயர்ந்தது அதிமுக ஆட்சியில் தான். மக்களின் ஜீவாதாரன பிரச்சனையான காவேரி நீரை கொண்டு வர கருணாநிதி எதுவும் செய்யவில்லை, காவேரி நீர் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பெற்று தந்தவர் ஜெயலலிதா.
எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக ஜனநாயக கடமையை ஆற்றுகிற கட்சியாக அதிமுக செயல்படுகிறது. ஜெயலலிதா பாதையில் தமிழகத்தில் எந்த குறையும் குற்றமும் சொல்ல முடியாத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்தார். மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் அண்ட புழுகு ஆகாச புழுகு கூறுவது திமுகவின் கருணாநிதி காலத்தில் இருந்து நடந்து வருகிறது. தேர்தல் முடிந்த பிறகு அதனை பற்றி கவலை படாதவர்கள் தான் திமுகவினர் .
திமுக ஆட்சியில் கட்ட பஞ்சாயத்து, தினம் தோறும் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு உள்ளது. எந்த குற்ற செயல்களும் தடுத்து நிறுத்துகிற நிலை திமுக ஆட்சியில் இல்லை. திமுக எப்போதெல்லாம் பொய் சொல்லி ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் ஆட்சியாக இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் ஒரு சில தவறான வியூகங்களால் தான் அதிமுக தோல்வியை தழுவியது. தற்போது திமுக ஆட்சியில் மின்வெட்டு நிறைந்த தமிழகமாக உள்ளதாக,’’ ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.