தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் வரை காலியாக உள்ள ஊராட்சி பதவிகளுக்கு வரும் 9ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இந்த நிலையில்  முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.  இதற்கான வேட்புமனுத்தாக்கல்கள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தமுள்ள 27,791 பதவிகளுக்கு ஒரு லட்சத்து 698 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் 1,246 வேட்புமனுக்கள் பரிசீலனையில் நிராகரிக்கப்பட்டு கடந்த 25ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 



இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 24416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி,கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி,வாலாஜா, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 39 ஒன்றியங்களில் வரும் 6 ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.




அதன் பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வெளியேறாதவர்கள் மீது தேர்தல் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்கள், அதைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுவரை உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள், கை மை, அரக்கு உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 17130 போலீசார் 3405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.