John Pandian: எந்த கொலைக்கும் என்கவுண்டர் நடவடிக்கை தீர்வாகாது; தீர்வு இதுதான் - ஜான் பாண்டியன்

தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெயர் வாங்கி விடலாம் என்ற எண்ணமே தவிர எதிரி என்ற எண்ணமில்லை, இந்த நிலை தான் தமிழகத்தில் அதிகம் உள்ளது. குறுகிய கண்ணோட்டத்துடன் ஒரு சிலர் இயங்கி கொண்டிருக்கின்றனர்.

Continues below advertisement

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தென் தமிழக தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறும் பொழுது, "மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை மக்களை மலைப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். அதனை அரசு தடுத்து செயல்படுத்த விடக்கூடாது. தேயிலைத் தோட்ட நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக் கொண்டு ஆளுங்கட்சியினரே மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். அரசை நாங்கள் கேட்பது என்னவென்றால் டேன்டி எடுத்து நடத்த வேண்டும், அல்லது ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம் கொடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.  வழக்கு நடத்துக்கொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். எங்களது போராட்டம் மாஞ்சோலைக்காக தொடரும் எனவும் தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும். இந்த கொலை வழக்கு நீண்ட தொடர்பை போல் மாறி உள்ளது. சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் படுகொலை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு சில காவல்துறையினர் உதவியாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அதிகாரிகளையும் கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை மாற்றுவதனால் நிச்சயம் இந்த இழி நிலைகள் நடந்து முடிந்து விடாது என்று அர்த்தமில்லை. கொலைக்களமாக மாறுகின்ற திமுக ஆட்சியில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனைகளை கொடுக்க வேண்டும் என்றார். 

எங்களை போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு சரியாக இல்லை என்பது உண்மைதான். கடந்த அதிமுக ஆட்சியில் எனக்களிக்கப்பட்ட பாதுகாப்பை திமுக அரசு அமைந்த பிறகு மாற்றி விட்டனர். இந்தியா  முழுவதும் சுற்றி திரியும் எனக்கு பாதுகாப்பை அரசு துரிதப்படுத்த வேண்டும். இது போன்று எல்லா தலைவர்களுக்கும் குறிப்பாக திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் இருக்கும் நிலையில் இவர்களது எண்ணங்கள் எல்லாம் தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெயர் வாங்கி விடலாம் என்ற எண்ணமே தவிர. எதிரி என்ற எண்ணமில்லை, இதுதான் உண்மை. இந்த நிலை தான் தமிழகத்தில் அதிகம் உள்ளது.  குறுகிய கண்ணோட்டத்துடன் ஒரு சிலர் இயங்கி கொண்டிருக்கின்றனர். அவர்களை கண்காணித்து தலைவர்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்பு தரவேண்டும். பாதுகாப்பு என்பது கூலிப்படை தமிழகத்தில் அதிகம் இருக்கிறது என்றால் வேலைவெட்டி இன்றியும், கஞ்சா அதிகம் புழங்குவது தான் காரணம். தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோவை பகுதிகளில் அதிகம் கஞ்சா நடமாடுகிறது. இது எப்படி கிடைக்கிறது என அரசு தான் கண்டுபிடிக்க வேண்டும். அதோடு இதனை ஊக்குவிப்பதும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தான். அரசு காவல்துறை அதிகாரிகளையும் முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்த கொலைக்கும் என்கவுண்டர் நடவடிக்கை தீர்வாகாது.  என்கவுண்டர் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். கொலைக்கு கொலைதான் தீர்வு என்றால் நீதிமன்றம் எதற்கு? நீதிமன்றத்தின் வாயிலாகவே கொலை குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு கிடைக்கும். என்கவுண்டர் நடவடிக்கையால் உண்மை குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலை உருவாக்கி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த கொலை எதற்கு நடந்தது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

Continues below advertisement