பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அவருடைய அலுவலக வாசலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. ஆடிட்டர் ரமேஷ் உருவப்படத்திற்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழகத்தில் 1990-களுக்குப் பிறகு இந்துத்துவ தலைவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்ணணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என இதுவரை பல்வேறு தாக்குதல்களில் 140-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மதவாத சக்திகளால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களால் இந்து இயக்கங்களை அச்சுறுத்தி விட முடியாது. சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷின் சமூகப் பணிகளை பாராட்டிடும் வகையில் தமிழக அரசு சேலத்தில் முக்கியமான சாலை, மேம்பாலம் அல்லது பூங்காவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும், கட்சி மாச்சரியங்களை கடந்து தமிழக அரசு இதனை செய்ய வேண்டும் .
முதலமைச்சர் ஸ்டாலின் தொட்டதற்கெல்லாம் மத்திய அரசையும், பிரதமரையும் குறை கூறி வருகிறார். மின் கட்டண உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், 3 வருட திமுக ஆட்சியில் எட்டரை லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. இந்த கடன் சுமை ஏற ஏற மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு திமுக அரசை கொண்டு வந்து விட்டு விட்டது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத திமுக அரசு, வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருகிறது. இந்தியாவில் அதிக குடிகாரர்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு பெரிய உத்தரபிரதேசத்தில் கூட இவ்வளவு குடிகாரர்கள் இல்லை. குடிகாரர்கள் நிறைந்த மாநிலம், கடனாளி மாநிலம் என்பதைத்தான் திமுக அரசு உருவாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் சாராய எதிர்ப்பு போராளிகள், அறிவுஜீவிகள் காணாமல் போய்விட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்பதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதுவே தாமதம்தான். சாகும் வரை கருணாநிதி தன்னுடைய மகன் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியையேயோ, கட்சித் தலைவர் பதவியையோ தரவில்லை. ஆனால் ஸ்டாலின் தான் நன்றாக இருக்கும்போது மகனுக்கு பதவி வழங்க நினைக்கிறார். திமுக குடும்பச் சொத்து. அடுத்தடுத்த வாரிசுகளுக்கு அங்கு நிச்சயம் பதவி கிடைக்கும்.
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா தொடங்க மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது. மாநில அரசு அதை தடுக்க முடியாது. கேந்திரய வித்யாலயா பள்ளி அமைக்காததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை என்பது உண்மையல்லை. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார். ஆனால், தில்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது இதுகுறித்து எதுவம் கூறவில்லை. சட்டசபையில் வீர வசனம் பேசிவிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எதுவும் பேசாமல் இருப்பதுதான் திமுகவினரின் வழக்கம்" என்று தெரிவித்தார்.