புதுச்சேரி மாநிலத்தின் எந்த பகுதியும் புறக்கணிக்கப்படாது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி :-மத்திய அரசின் பல்வேறு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதையொட்டி கம்பன் கலையரங்கத்தில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்துவைத்தார்.
ஆளுநர் தமிழிசை பேசியதாவது:- மத்திய அரசின் திட்டங் களால் மக்கள் மனது நிறைந்துள்ளது. அதனால் அரங்கும் நிறைந்து உள்ளது. பிரதமர் பேசும்போது, பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று அடிக்கடி கூறுவார். பெண்கள் முன்னேறினால் வீடும் முன்னேறும். அதனால் தான் உஜ்வாலா என்ற இலவச எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் குடும்ப தலைவியின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டது. பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டம், முத்ரா வங்கிக்கடன் திட்டம் போன்றவற்றில் குறிப்பிட்ட சதவீதம் பெண்கள், அட்டவணை இனத்தவர், பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டது. அதனால் இந்த திட்டங்கள் பரவலாக எல்லா பிரிவினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.
மறுக்கப்படாது நிர்வாக குறைபாடு காரணமாகவோ, நிறுவனங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாகவோ சில திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். ஆனால் மறுக்கப் படாது என்பதை புதுச்சேரி மக்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். புதுவை எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்கவேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் 'பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் 3 ஆண்டுகள் சவாலான காலமாகும். இந்த காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்றை சந்தித்தோம். சுவிட்சர்லாந்தில் நடந்த மாநாட்டில் உலக தலைவர்கள் பிரதமர் மோடியை பாராட்டினார்கள்.
காரைக்கால் :-
புதுவையை பொறுத்தமட்டில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் புதுவைக்கு நல்ல பல திட்டங்களை வழங்க உள்ளார். உள்துறை மந்திரி அமித்ஷா புதுவை வந்தபோதும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். இப்போது காரைக்கால் ஒதுக்கப்படுகிறது. காரைக்காலை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு நான் காரைக்காலுக்கு சென்று தலைமை செயலாளருடன் சேர்ந்து கூட்டங்கள் நடத்தி அங்குள்ள திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டோம். காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாக குழுவினருடன் கூட்டமும் நடத்தினோம். பெட்ரோல், டீசல் விலை குறைவு எந்த வகையிலும் புதுவையின் எந்த பகுதியும் புறக் கணிக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவை பல புதுமைகளை காண உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தென்னிந்தியாவில் புதுச்சேரியில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. மக்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் விலையை குறைத்துள்ளன. பக்கத்து மாநிலங்கள் விலையை குறைக்க தயங்கினாலும் மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்கள்நலன் சார்ந்த அரசுகளின் சிந்தனையே அதற்கு காரணம். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். அமைச்சர்கள் விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி., அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, கலெக்டர் வல்லவன், போலீஸ் ஐ.ஜி. சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிசான் திட்டம், உஜ்வாலா திட்டம், ஸ்வச் பாரத் திட்டம் உள்ளிட்ட 14 திட்டங்களின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.