பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்து தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. பிரதமர் தொடங்கி பாஜக கவுன்சிலர்கள் வரை, பலரும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். இந்த நிலையில், இளைஞர்களுக்கு மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ வழங்கிய அறிவுரை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை கருத்து: மத்திய பிரதேசத்தில் உள்ள 55 மாவட்டங்களில் 'பிஎம் காலேஜ் ஆஃப் எக்ஸலன்ஸை' காணொளி காட்சி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
குணாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ பன்னலால் ஷக்யா, டிகிரியால் எந்த பயனும் இல்லை என்றும் மோட்டார் சைக்கிள் பஞ்சர் பழுதுபார்க்கும் கடைகளைத் திறக்கும்படியும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நாங்கள் இன்று PM Excellence கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
"டிகிரியால் எந்த பயனும் இல்லை" அதற்கு பதிலாக, குறைந்த பட்சம் வாழ்வாதாரத்தை ஓட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பஞ்சர் பழுதுபார்க்கும் கடையைத் திறந்து வைத்து கொள்ளுங்கள். மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழலில் கவலை உள்ளது. ஆனால், யாரும் பஞ்சபூதங்களை பாதுகாக்கும் திசையில் செயல்படுவதில்லை.
முதலில் மனித உடலின் ஆதாரமான பஞ்சபூதங்களை (பூமி, காற்று, நீர், சூரிய ஆற்றல் மற்றும் வானம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து கூறுகள்) காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
இன்று நாம் நட்ட மரங்களை எவ்வளவு காலம் பாதுகாப்போம். அவை வளருவதை உறுதிசெய்வோம். ஆறுகள் மற்றும் வடிகால்களில் உள்ள அரசு நிலங்களில் பரவலாக ஆக்கிரமிப்பு நடக்கிறது. பக்கவிளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் எதையும் சாப்பிடுகிறார்கள்" என்றார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.