நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் உள்ள 12 மாநில முதல்வர்களின் ஆதரவு கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதோ அந்த கடிதத்ததில் கூறப்பட்டுள்ளது விபரங்கள் அப்படியே அச்சுமாறால் வெளியிடுகிறது ஏபிபி நாடு:




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கல்வித்
துறையை நிருவகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன்
அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை
எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான
சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை
ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களது
குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும்
மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கான
சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச்
செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப்
பரிந்துரைக்குமாறு அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், நீதியரசர் ஏ.கே. இராஜன்
அவர்களது குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021"
என்ற சட்டமுன்வடிவினை நிறைவேற்றியுள்ளதாகவும், அந்தச் சட்டமுன்வடிவின்
நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித்
தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும்


மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின்
உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது
என்பதே தங்களது நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள், இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில்
அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும்,
நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென்று தாங்கள் கருதுவதாகவும்
தெரிவித்துள்ளார்.


தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து,
கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி
நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த
மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும்
தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை
நிருவகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள்
அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டு, இந்த
முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.




இதுகுறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி,
மாண்புமிகு நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு
நகலை பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர
வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.


செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.