அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, தமிழக அரசு நடத்திய பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். இருப்பினும், 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கல்வி படிப்பை தவறவிட்டார். இதனால், மனம் உடைந்த அவர்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார். 


இந்நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அஇஅதிமுக கட்சியை ஆதரித்து அனிதா பேசுவதைப் போல் வீடியோ ஒன்றை இன்று காலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். இந்த, வீடியோ தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மாபெரும் இழிச்செயல் என்றும் உடனடியாக அந்த வீடியோ பதிவை நீக்கி விட்டு தமிழக மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். 


 






 


அனிதாவின் சகோதரர் மணிரத்னம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வை தனது இறுதி மூச்சு வரை எதிர்த்தவர  அனிதா. ட்விட்டரில் அனிதா பேசுவது போல் வெளியிட்ட வீடியோ அவருக்கு இழைத்த மிகப்பெரிய அவமானம். இதுதொடர்பாக, செந்துரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.  


 






 


இந்நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவை தற்போது நீக்கி விட்டார்.