பிரபல ரவுடி சூர்யா


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34). இவர் மீது பீர்க்கன்கரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவி மற்றும் கோகுல் என்ற மகன், யுவஸ்ரீ என்ற மகள் உள்ளனர்.  


ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலின்பொழுது வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி, சிறையில் இருந்தபடியே துணை தலைவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பாஜகவில் அவருக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது.




 பலமுறை முயற்சி


தொடர்ந்து விஜயலட்சுமி கட்சி ப்பணி செய்வது,  தலைவர்கள் வரும்பொழுது பேனர் வைப்பது,   கூட்டம் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் அருகே நடைபெற்ற பாரதி ஜனதா கட்சி நிகழ்ச்சி ஒன்றில், மாற்றுக் கட்சியினர் இணைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்பொழுதே பாஜகவில் இணைய நெடுங்குன்றம் சூர்யா வந்தபொழுது போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டனர்.  இதை தெரிந்து கொண்ட சூர்யா அங்கிருந்து தப்பி ஓடினார்.


 தனக்கென தனி அமைப்பு


இந்தநிலையில் மனைவி பாஜகவில் இருக்கும்பொழுது , கடந்த ஆண்டு தனக்கென்று ஒரு தனி இயக்கத்தையே உருவாக்கிக் கொண்டார் நெடுங்குன்றம் சூர்யா. ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவனராக  செயல்பட்டு வந்தார்.  அவ்வப்பொழுது பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட நெடுங்குன்றம் சூர்யா  சிறையிலும் இருந்து வந்தார். நெடுங்குன்றம் சூர்யா கடந்த சில மாதங்களாக ஜாமீனில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.  நேற்று பாஜகவில் அவருக்கு மாநில பட்டியலினப் பிரிவு செயலாளராக  பதவி வழங்கப்பட்டுள்ளது .




 தொடர்ந்து இன்று செய்தியாளரை சந்தித்த நெடுங்குன்றம் சூர்யா தெரிவித்ததாவது : 


பாஜக  செய்யும் நல்ல காரியங்கள் எனக்கு பிடித்துள்ளது. எனது மனைவி பாரதிய ஜனதா கட்சியில் பணியாற்றியதை பார்த்து,  நானும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறேன். மோடி ஐயாவின் பத்தாண்டு கால ஆட்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அதேபோன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒர்க்கிங் ஸ்டைல் எனக்கு பிடித்துள்ளது.  அவரின் ஆளுமை எனக்கு பிடித்துள்ளது.  அண்ணாமலை காட்டும் வழியில் பயணிப்பேன்.


" என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் '


என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளுக்கு நீதிமன்றம் சென்று கொண்டு தான் இருக்கிறேன். தற்பொழுது என் மீது எந்த நீதிமன்ற வாரன்ட்டும் இல்லை.  பல வழக்குகளில் இருந்து விடுதலை ஆகியுள்ளேன். இருக்கின்ற வழக்குகளிலும் நீதிமன்றத்தின் மூலம் தப்பில்லை என நிரூபிப்பேன். 


மக்கள் பாராட்டும்படியாகவும், ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எனது பணி இருக்கும். எனது கட்சித் தலைவர் அண்ணாமலை என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். என் பெயரை  யாராவது தவறாக பயன்படுத்தினால் நிச்சயமாக அவர்கள் மீது  காவல்துறையில் புகார் தெரிவியுங்கள். 



என்னுடைய பெயரை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துக் கொள்கிறேன்.  காவல்துறை அதிகாரிகளிடம் என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என கூறிவிட்டேன். இப்போது செய்தியாளர் சந்திப்பின் மூலம் இதை அனைவருக்கும் தெரிவிக்கின்றேன். இனி எதிலும் தலையிடப் போவது கிடையாது நீதிமன்றத்திற்கு சரியாக சென்று ஆஜராகி , வழக்கை  முடிக்க உள்ளேன்.


வன்முறை தீர்வாகாது


காவல்துறை நடவடிக்கையின் காரணமாக பாஜகவில் சேரவில்லை.  ஏற்கனவே என் மனைவி பாஜகவில் இருக்கிறார். ஏற்கனவே நாங்கள் கூட்டமைப்பு ஒன்று  வைத்திருக்கிறோம். நான் எளிமையான பின்னணியில் இருந்துதான் வந்திருக்கிறேன். தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன். வன்முறையை நாடக்கூடாது, வன்முறை எதற்கும் தீர்வாகாது.  எந்த அரசியல் நல்ல அரசியலோ,  அந்த அரசியல் செய்யும் தலைவர்களுடன் பயணம் செய்யுங்கள்.


பாஜகவில் சேர்ந்த பிறகு என்னுடைய பணிகள் அனைத்தும் அரசியல் சார்ந்துதான் இருக்கும். வன்முறை எதுவும் இருக்காது. யாராவது என் பெயரை கூறினார்கள் என்றால் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். காவல்துறையினர் அமைதியாக இருப்பவர்களை எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்களும் உளவுத்துறை வைத்திருக்கிறார்கள், அவர்கள் விசாரித்து தவறு செய்பவர்கள் மீது தான்  நடவடிக்கை எடுப்பார்கள்.


 போதைப் பொருள் வேண்டாம்


போதைப் பொருட்கள்தான் ரவுடிசத்தை அதிகமாக வளர்க்கிறது.   சிறிது நேரம் போதைக்காக வாழ்க்கையை வீணாக்க வேண்டாம். இளைஞர்கள் போதைக்கு அடிமையாக வேண்டாம்.  ரவுடிசம் திரையில் பார்க்க நன்றாக இருக்கும்,  வாழ்க்கைக்கு செட்டாகாது.   சிறையில் வில்லனாக நடிப்பவர்களை நேரில் பார்த்தால் திட்டுகிறார்கள் அப்படி என்றால் நிஜத்தில் வில்லனாக இருந்தால் ?  உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கண்டிப்பாக இருக்கும். 


இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.  


பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி பாஜகவில் இணைந்திருக்கும் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை  கிளப்பியுள்ளது