பள்ளியில் குளம்போல் மழைநீர் தேங்கும் தகவலை சமூக வலைதளங்களின் மூலம் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திடீரென அதிகாரிகளுடன் களமிறங்கி, கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார்
காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை
காஞ்சிபுரம் ( Kanchipuram Rain ) : காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, பேருந்து நிலையம், செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், சாலையில் ஓரமாக மழை நீர் செல்லாமல் கழிவுநீருடன் ஆங்காங்கே நீர் தேங்கியும் வருகிறது.
சமூக வலைத்தளத்தில் எழுந்த புகார்
இந்நிலையில் தொடர்ந்த பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் டாக்டர்.பி.எஸ். ஸ்ரீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மைதானத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி, கொசுக்கள் அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை டேக் செய்து பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. குளம் போல் தேங்கி இருக்கும் மழை நீர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தனர்.
களத்தில் இறங்கிய சட்டமன்ற உறுப்பினர்
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பள்ளியின் மைதானத்தில் அதிக மழை நீர் தேங்கி அசத்தும் ஏற்பட்டு வரும் செய்தி பரவி வருவதை அடுத்து, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் பள்ளிக்கு சென்று தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதுபோன்று மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் சி.பி எம் பி எழிலரசன் கேட்டுக் கொண்டார்.
மழையும் பொருட்படுத்தாமல் ஆய்வு
சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது , திடீரென மழை பெய்தது. எனினும் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல், சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு பள்ளமாக இருக்கும் பகுதிகளில் மண்ணை கொட்டி நிரப்பி சமப்படுத்தி, இனி மழை தண்ணீர் தேங்காத அளவிற்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மழையும் பொருட்படுத்தாமல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.