வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பழமை வாய்ந்த மாநிலங்களில் ஒன்று ஒடிசா. ஒடிசாவை கடந்த 24 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம் ஆட்சி செய்து வந்த நிலையில், அவர்களது ஆட்சியை தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.


அதிர்ச்சி தந்த ஒடிசா தேர்தல் முடிவு: கடந்த 25 ஆண்டுகளாக ஒடிசா முதலமைச்சராக பதவி வகித்தவர் பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன் பட்நாயக். ஒடிசாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த இவரே, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.


அந்தளவுக்கு நிலைமை அங்கு மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி. கே. பாண்டியன். தமிழ்நாட்டை சேர்ந்த இவர், பிஜு ஜனதா தளத்தில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக அதன் தலைவராக வருவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.


ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து நலத்திட்டங்கள் வகுப்பதில் முக்கிய பங்காற்றினார். 


இந்த நிலையில், தேர்தல் தோல்வியை தொடர்ந்து வி.கே. பாண்டியன் மீது கடும்  விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு முதல்முறையாக பதில் அளித்த நவீன் பட்நாயக், "பாண்டியன் மீது சில விமர்சனங்கள் எழுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது.


மனம் திறந்த நவீன் பட்நாயக்: பாண்டியன் கட்சியில் சேர்ந்தார். எந்த பதவியும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. என்னுடைய வாரிசு யார் என என்னிடம் கேட்கும் போதெல்லாம் ​பாண்டியன் இல்லை என்று நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். எனது வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலில் வெற்றி, தோல்வி எல்லாம் மக்கள் கையில் உள்ளன. ஜனநாயகத்தில் ஒன்று வெற்றி அடையலாம் அல்லது தோல்வி அடையலாம். எனவே, நீண்ட நாட்களுக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாங்கள், மக்களின் தீர்ப்பை எப்போதும் மகழ்ச்சியாக எடுத்து கொள்ள வேண்டும்" என்றார்.


ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் சேர்ந்தே நடத்தப்பட்டது. மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. 1 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் தோல்வி அடைந்தது.


அதேபோல, சட்டப்பேரவை தேர்தலில் 147 தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும் காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றது.