ஒரு நாடு, ஒரே தேர்தல், எம்.பி.க்கள் அதிகப்படுத்துதல் போன்ற எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்ற பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு அனுமதிக்க மாட்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன்


மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரியக்க முன்னோடி தங்கையன் மகள் லீலாவதி இல்ல திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியாவில் 3-வது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதாக கூறினாலும் தனித்து ஆட்சி அமைக்காமல் கூட்டணிக்கு கையேந்தும் நிலையை மக்கள் உருவாக்கியுள்ளனர். மோடி தனது சொந்த தொகுதியில் பல லட்சம் வாக்கு குறைவாக பெற்றுள்ளார். 




பாஜகவிற்கு பாடம் புகட்டியுள்ள மக்கள்


கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நாசகர திட்டங்களை செயல்படுத்தியதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டியுள்ளனர். மக்களவையில் 234 உறுப்பினர்கள் வெற்றிபெற்று எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். எதிர்காலத்தில் பாஜகவின் மோசமான நடவடிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவது மட்டுமல்லாமல் மக்களவையில் போராடுவதற்கு வலுவான எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று இந்திய அரசியலை தீர்மானகரமான பங்கினை வகிக்கக்கூடிய அளவிற்கு தமிழகம் உயர்ந்து உள்ளது. 




நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்


மோடி அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு மிகப்பெரிய அளவில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மையத்தில் தேர்வு எழுதி இருக்கிறவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது சந்தேகம் ஏற்படுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். முறைகேடுகளை விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகள் தான் தீர்மானிக்க வேண்டும். தொடர்ந்து நீட் தேர்வால் சர்ச்சைகள் நீடித்துகொண்டிருக்கிறது. தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்றால் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 


தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெற்றுத்தர வேண்டும்


குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க மேட்டூரில் தண்ணீர் குறைவாக உள்ளது. தென்மேற்கு பருவமழை சாதகமாக அமைந்திருந்தாலும், காவிரி நதிநீர் ஆணையம் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகாவில் இருந்து பெற்றுத்தர வேண்டும். கர்நாடகா அரசிடம் நமக்கு கொடுக்க வேண்டிய பங்கு தண்ணீரைதான் கேட்கிறோம். அதனை உரிய நேரத்தில் கர்நாடகா கொடுத்தால் குறுவை சாகுபடிக்கு பயன்படும். மழைக்காலத்தில் அதிக அளவு நீரை திறந்துவிட்டு எந்த பயனும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒன்றிய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெற்றுத்தர வேண்டும். 




பல தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது


ஒரு தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியில் கூட தமிழகத்தில் வெற்றிபெறவில்லை. பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். இன்று இருக்கிற சூழல் அடுத்த தேர்தலில் இருக்காது. எல்லா உயர்மட்ட தலைவர்களையும் களத்தில் இறக்கி தமிழகத்திற்கு மோடி பலமுறை வந்தும் பலகோடி ரூபாய் செலவு செய்தும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை அதுதான் மக்கள் தீர்ப்பு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மோடியின் எந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பே கிடையாது. ஒரு நாடு ஒரே தேர்தல், எம்.பி.க்கள் அதிகப்படுத்துதல் போன்ற என்ற திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொள்வாரா? கூட்டணி கட்சிக்குள் ஒருமித்த கருத்து வராது.


அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு இரண்டில் மூன்று பங்கு மெஜாரிட்டி வேண்டும்


அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு இரண்டில் மூன்று பங்கு மெஜாரிட்டி வேண்டும். பாஜகவுக்கு தனிமெஜாரிட்டியே இல்லை எப்படி செயல்படுத்த முடியும். கேரளாவில் பாஜகவில் இடமில்லாமல் போயிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செயல். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் நினைத்து வாக்களித்து இருக்கலாம். கம்யூனிஸ்ட் வெற்றி பெறவில்லை என்றாலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரபாபு நாயுடு கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் மோடி இணைத்தார். இந்த தேர்தல் ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்க்க கூட்டணி அமைத்துள்ளார். இந்த கூட்டணி எத்தனை நாள் நீடிக்கும் என்பதை பார்ப்போம். இவ்வாறு பேசினார்.