நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த முனியாண்டி - அம்பிகாவதி தம்பதியின் 17 வயது மகன் ப்ளஸ் டூ மாணவர். இவரை கடந்த 9-ஆம் தேதி இரவு 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. தடுக்க சென்ற அம்பிகாவதியின் மகளுக்கும் வெட்டு விழுந்தது. இது குறித்து நாங்குநேரி போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் ஏற்பட்ட ஜாதி ரீதியான பிரச்சினை காரணமாக சக மாணவர்களே அம்மாணவரை வீடு புகுந்து வெட்டியது தெரியவந்தது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த அம்பிகாவதி மகனை மாற்று சமூக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அம்பிகாவதி இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த காரணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாற்று சமூக மாணவர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதில் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் சிறார்களை கைது செய்தனர். 


இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த அம்பிகாவதியின் மகன் மற்றும் மகள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சினிமா நடிகர்கள், தமிழக முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இச்சம்பவம் வைரலாகி வருகிறது. இச்சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவதியிடம் தொலைபேசியில்  ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு தங்களது குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கும் அரிவாள் வெட்டு சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த முதியவர் கிருஷ்ணன் குடும்பத்திற்கும் திமுக சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. 




 தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில்:- ”பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் படி முதல்வர் என்னிடம் தெரிவித்தார். மேலும் மாணவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு உடன் உறுதுணையாக  இருக்கும் என்ற ஆறுதலையும் முதல்வர் தெரிவித்தார்.


குழந்தைகளின் கல்வி தடைபடாத அளவில் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது மாணவனுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் கல்விக்கு தேவையான உதவிகளை செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல்வரே நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாயிடம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். குற்ற செயல் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண