திருநெல்வேலி நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான ரூபி மனோகரன், கட்சியின் மாநில பொருளாளராகவும் உள்ளார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸில் இவர் நியமித்த நிர்வாகிகளுக்கு பதிலாக கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் புதிய நிர்வாகிகளை நியமித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.


உட்கட்சி மோதல்:


அதன் தொடர்ச்சியாக, ரூபி மனோகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஜெயகுமாருக்கு எதிராக புகார் அளிக்க சென்று இருந்தார். மேலும் காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமாரை மாற்றக்கோரி ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் முற்றுகையிட்டனர்.


நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரியை ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் மோதல் வெடித்தது. போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.


நீக்கம்:


இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரையின் பேரில், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதற்கு, அவர் 15 நாட்கள் அவகாசம் கேட்டு இருந்ததாகவும், ஆனால் அவர் அளித்த விளக்கம் ஏற்றதாக இல்லை, எனவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி தெரிவித்தார்.


நீக்கம் நிறுத்தம்:


ஆனால், ரூபி மனோகரன் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


இந்நிலையில் ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைப்பதாக காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.




இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக காங்கிரஸ் விசாரணை குழு தலைவர் ராமசாமி நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ததை அறிந்தேன். ஆனால் இந்த விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை, இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், இப்போழுது நடக்கும் அனைத்தும் தமிழக காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலையே வெளிச்சம் போட்டு காட்டுவதாக தொண்டர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.