தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஐதராபாத்தில் உள்ள, ஆளுநர் மாளிகையில் பாஜக மாநிலங்களவை எம்.பி. லட்சுமன் சந்தித்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களும் உடனிருந்தனர்.
26 சமூகங்களை BC பட்டியலில் சேர்க்க கோரிக்கை:
சந்திப்பின்போது, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விளக்கி கூறி, அதுதொடர்பான மனுவையும் ஆளுநரிடம் வழங்கினர்.ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இருந்த 26 சமூகங்களை, தெலங்கானா அரசு அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகவும், மீண்டும் அச்சமுகத்தினரை பிற்படுத்தப்பட்ட சாதிபட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை:
அதைதொடர்ந்து, பல்வேறு துறைசார் வல்லுநர்கள் உடனும், தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் மளிகையில் ஆலோசனை நடத்தினார். பழங்குடியினர் மேம்பாடு, சுகாதாரம், இளைஞர் அதிகாரம், தேசிய கல்விக் கொள்கை என, தெலங்கானா மநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.