தீபாவளி கொள்முதலில் சிறிய நிறுவனங்கள் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து கழகங்களில் ஆர்டரைப்பெற்று சப்ளை செய்து வந்தன. இவை அனைத்தும் லட்சக்கணக்கான ரூபாய் ஆர்டர்களே. ஆனால் திடீரென இந்த டெண்டர்களில் பங்குபெற குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ரூ.100 கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற வேண்டும் என விதி திருத்தப்பட்டது. இதனால் சிறிய நிறுவனங்கள் பங்கேற்பது இயலாமல் போவதும், மிகப்பெரிய ஒரே நிறுவனம் மட்டுமே பங்குபெற வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது, இதன்மூலம் மிகப்பெரும் பர்சன்டேஜ் கமிஷனாக பெறப்படும் வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.


மறுபுறம் அரசின் ஆவின் நிறுவனம் இருக்கும்போது அங்கு கொள்முதல் செய்யாமல் தனியாரை நோக்கி ஏன் புதிய திமுக அரசும் செல்லவேண்டும் என்கிற வாதமும் வைக்கப்பட்டு முதல்வர் தலையிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றிலும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஸ்வீட் கொடுப்பதற்கு ரூபாய் 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கின்ற கம்பெனிகளில்தான் ஸ்வீட் வாங்குவேன் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் சொல்ல காரணம் கரப்ஷனா, பல்க் கமிஷனா என்பதை முதல்வர் பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.


அத்துடன் இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்திலும் விமர்சித்திருந்தார் அண்ணாமலை. சமூக வலைதளங்களிலும் தமிழக அரசின் டெண்டர் திருத்த விவகாரம் விவாதப் பொருளானது. தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யாமல் ரூ100 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம்தான் இனிப்புகள் வாங்குவேன் என அடம்பிடிப்பது ஏன் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் நிறுவனங்களிடம் இனிப்புகளை கொள்முதல் செய்யக் கூடாது; ஆவின் நிறுவனத்திடம்தான் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார்.



இது குறித்து தலையங்கம் எழுதியிருந்த நமது அம்மா பத்திரிக்கை அண்ணாமலையை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளது. அதில், "ஆவினிடம் இருந்து சுவீட் பாக்ஸ்கள் வாங்கப்படும் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறதே தி.மு.க. ஆட்சி" என்ற கேள்வியை துவங்கும் அந்த தலையங்கத்தில் அவரது பதிலாக, "என்ன செய்வது? அக்கிரமம் நடக்கப்போகிறது என்பதை கண்கொத்தி பாம்பாக கவனித்தவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இதனை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மக்களுக்கு பகிரங்கப்படுத்தியதன் விளைவாக சுவீட் பாக்ஸ்கள் பெயரால் கோடான கோடிகளை கொள்ளையடிக்க திட்டமிட்டவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திடமே போக்குவரத்து தொழிலாளர்களுக்கான தீபாவளி சுவீட் பாக்ஸ்களை கொள்முதல் செய்து கொள்கிறோம் என்று தி.மு.க. ஆட்சி சோகமே வடிவாக அறிவித்திருக்கிறது." என்று கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது.


அதனை தொடர்ந்து அண்ணாமலையை புகழ்ந்து தள்ளியுள்ள நமது அம்மா பத்திரிக்கையில் எழுதியிருந்ததாவது, "இதில் பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை உண்மையிலேயே வெகுவாக பாராட்டப்பட வேண்டியவர். அவர் ஊழலுக்கு எதிராக கண்ணிவெடி வைத்து தாக்குகிறார். தி.மு.க.வின் ஊழல் அமைச்சர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். இந்த வாரத்தில் மட்டும் அணில்துறை அமைச்சரையும், சுவீட் பாக்ஸ் அமைச்சரையும் கதற விட்டிருக்கிறார்." என்று எழுதியிறுக்கிறார்கள்.



அதில் அனில்துறை அமைச்சர் என்று மின் கம்பிகளில் அணில் ஓடுவதால் பவர்கட் ஆகிறது என்று கூறிய மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியையும், சுவீட்பாக்ஸ் அமைச்சர் என்று போக்குவரத்து ஊழியர்களுக்கு சுவீட்பாக்ஸ் தருவதற்கு தனியார் டெண்டர் கொடுத்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனையும் குறிப்பிடுகின்றனர்.


மேலும் அண்ணாமலையை புகழும் விதமாக, "தி.மு.க. அமைச்சர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உற்று நோக்குகிற அவரது முனைப்பு, முயற்சி கையூட்டையும், களவையும் தடுக்கிறது என்றால் அதனை பாராட்டத்தானே வேண்டும். ஒரு காவல் அதிகாரி ஒரு கட்சியின் தலைமை பொறுப்பைஏற்றிருப்பது ஒர் வகையில் பொதுவாழ்க்கையில் தலைவிரித்தாடும் லஞ்சம், திருட்டு, போன்றவற்றை கண்டறிந்து தடுப்பதற்கான மிக சிறந்த காரியம் என்பதை நித்தம் நித்தம் நிரூபித்து வருகிற அண்ணாமலைக்கு ஒரு அரோகரா போடலாமே?" என்று ஒரே அடியாக புகழந்துள்ளது நமது அம்மா பத்திரிக்கை. இது ஒருபுறமிருக்க ஒரு கட்சியின் நாளிதழ், இன்னொரு கட்சியின் தலைவரை இப்படி புகழ்ந்துள்ளதே என வியப்பவர்களும் உள்ளனர்.