தன் மகள் சோயஸ் காந்தி மீதான குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் பதிலடி கொடுத்துள்ளதோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு சவால் விடுத்துள்ளார்.
ஸ்மிருதி இரானி மகள் மீது குற்றச்சாட்டு:
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் சோய்ஸ் ரானி. இவர் கோவாவில் உள்ள அஸ்ஸாகவோ பகுதியில் ரெஸ்டாரண்ட் மற்றும் அதனுடன் சேர்ந்த சொகுசு மதுபானவிடுதியும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மதுபான விடுதியின் உரிமம் முடிவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி உரிமத்தை புதுப்பிப்பதற்காக அந்தோணி காமா என்ற பெயரில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு ரெஸ்டாரண்ட்டுக்கான உரிமமும் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்தோணி காமா கடந்த 2021 மே மாதம் 17ம் தேதியே உயிரிழந்துவிட்டார். உயிரிழந்தவரின் பெயரில் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தது வழக்கறிஞர் ஏரிஸ் ரோட்ரிகஸ் என்பவர் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் கேட்டதில் தெரியவந்தது. இதனையடுத்து ரெஸ்டாரண்ட் நடத்த ஆவணங்கள் திரிக்கப்பட்டு போலியான ஆவணங்கள் மூலம் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளதாக கோவாவின் சுங்கவரித்துறை ஆணையர் நாராயணன் எம் காட்டிடம், ரோட்ரிகஸ் புகார் அளித்ததையடுத்து, சில்லி சோல்ஸ் கஃபேவிற்கு கடந்த ஜூலை 21ம் தேதி ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகார் வரும் ஜூலை 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
காங்கிரஸ் விமர்சனம்:
காங்கிரஸ் கட்சி இதனை கடுமையாக விமர்சித்துவருகிறது. பிரதமர் மோடி ஸ்மிருதி இரானியை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி காங்கிரஸ் கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்மிருதி இரானி பதிலடி:
“முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியான எனது மகள் எந்த பாரையும் நடத்தவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், “எனது மகளின் தவறு எதுவென்றால், அவரது அம்மா செய்தியாளர் சந்திப்பை நடத்தி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் 5000 கோடி ரூபாய் ஊழல் பற்றி பேசியது தான். அவரது தவறு, அவரின் அம்மா ராகுல் காந்தியை எதிர்த்து 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நின்றது தான்.” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தன் மகளின் குணத்தை பொதுவில் வைத்து சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், முறைகேடுகள் நடப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்டுள்ளதோடு, “இவைகளுக்கான பதிலை நீதிமன்றத்திடமும், மக்கள் நீதிமன்றத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தியால் அமேதி தொகுதியில் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியுமா என்று சவால் விடுத்துள்ள ஸ்மிருதி இரானி, அவர் மீண்டும் தோற்பார் என்று சத்தியம் செய்கிறேன் என்று கூறினார்.
வழக்கறிஞர் பதில்:
இதுதொடர்பாக பேசியுள்ள ஸ்மிருதி இரானி மகளின் வழக்கறிஞர் கிரட் நக்ரா, “சோய்ஸ் இரானி சில்லி சோல்ஸ் என்ற பெயரில் கோவாவில் எந்த ரெஸ்டாரண்டையும் நடத்தவும் இல்லை, அதற்கு உரிமையாளரும் இல்லை. அதோடு, யாரிடமிருந்தும் ஷோகாஸ் நோட்டிசும் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், “சோய்ஸ் இரானியின் தாயார் ஸ்மிருதி ராணியுடனான அரசியல் கணக்குகளுக்கு பழி தீர்க்க அவரது மகள் மீது தவறான, அற்பமான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறானவற்றை சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்” என்று கிரட் நக்ரா கூறியுள்ளார்.