தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைகளில் மிகவும் பரிச்சயமானவர்கள் பட்டியலில் சு.திருநாவுக்கரசரை முன்னிறுத்திவிடலாம். தற்போதைய மத்திய அரசில் திருச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.ஆல் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சட்டக்கல்லூரி மாணவராக இருந்தவர் அதிமுக அரசின் கீழ் ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சியில் கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 




ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி என தமிழ்நாட்டின் மறைந்த மூன்று முக்கிய முதலமைச்சர்களிடமும் அந்தந்த காலக்கட்டங்களில் நெருக்கமாக நட்பு பாராட்டியவர் திருநாவுக்கரசர். ‘எம்.ஜி.ஆர்.,ம் கருணாநிதியும் எனக்கு ஒன்னுதான்’ என்றே தனது பேட்டியைத் தொடங்குகிறார். இவர்களுடனான தனது ப்ளாஷ்பேக்கை அசைப்போட்ட அவரின் பேட்டியில் இருந்து சில துளிகள், ‘எம்.ஜி.ஆர் இறந்த சமயம் அவருக்கு அறந்தாங்கியில் சிலை வைத்தேன். எம்.ஜி.ஆர்.,க்காக முதன்முதலில் சிலை வைத்தது நான்தான். அதன்பிறகுதான் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் சிலை வைக்கப்பட்டது. நான் வைத்த சிலையை சென்னை அலுவலகத்துக்குத் தரும்படி அப்போது ஜெயலலிதா என்னிடம் கேட்டார். சிலை நிறுவிவிட்டதால் தரமுடியாது என மறுத்துவிட்டேன். அதன்பிறகுதான் ஜெயலலிதா புதிய சிலையை அதிமுக அலுவலகத்தில் நிறுவினார்.




நான் நிறுவிய எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தது கருணாநிதிதான். உண்மையில், எம்.ஜி.ஆர்., ஐச் சந்திப்பதற்கு முன்பே நான் கருணாநிதியை சந்தித்திருந்தேன். நான் எட்டாவது படிக்கும்போது எங்கள் ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அவர் வந்திருந்தார். அவர் பேச வருகிறார் என்பதால் அரைநாள் விடுப்பு கொடுத்தார்கள். சிறுவர்கள் நாங்கள் போய் அமர்ந்து அவர் பேசியதைக் கேட்டோம். அதிமுகதான் என் அரசியல் அறிமுகம் என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் நான் மாணவனாக இருந்தபோது திமுகவில் இருந்திருக்கிறேன். எங்கள் தொகுதியின் திமுக மாணவரணிச் செயலாளராகப் பணியாற்றி இருக்கிறேன். அப்போதிருந்து எனக்குக் கருணாநிதியுடன் அறிமுகம் இருந்தது. அது பின்னாளில் அதிமுக அமைச்சரவையில் நான் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் தொடர்ந்தது. அவரது வாழ்நாள் முழுக்க அவரோடு நான் சுமுகமான நட்பில் இருந்தேன். எந்த ஒரு அரசியல் தலைவரையும் தனிப்பட்டு தாக்கியோ அல்லது அவர்களது குடும்பத்தை விமர்சித்தோ நான் இதுநாள் வரை பேசியது இல்லை. மூன்று முதல்வர்களுடனும் ஒரு இணக்கமான நட்பில் இருந்ததற்குக் காரணமும் அதுதான்’ என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண