இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை நாடாளுமன்ற மக்களவை தேர்தல்தான் தீர்மானிக்க போகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


மத்திய, வட இந்திய மாநிலங்களை தவிர்த்து தென் மாநிலங்களிலும் கிழக்கில் உள்ள மாநிலங்களிலும் குறிப்பிடுத்தகுந்த வெற்றியை பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், அதற்கு இந்தியா கூட்டணியும் பிராந்திய கட்சிகளும் மிகப் பெரிய சவாலாக உள்ளன.


ஒடிசாவில் தமிழரை டார்கெட் செய்யும் பிரதமர்:


குறிப்பாக, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தை பின்னுக்கு தள்ள பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மாநில முதலமைச்சராக உள்ள நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக கருதப்படும் வி.கே. பாண்டியனை டார்கெட் செய்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.


முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தவர். ஒடிசா அரசாங்கத்தில் பணியாற்றியபோது, நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையை பெற்றவர். ஒடிசாவில் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் வி.கே. பாண்டியனை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, "பூரி ஜெகந்நாதர் கோயிலின் கஜானா சாவிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.


ஆங்குலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக பேசிய பிரதமர் மோடி, "இங்குள்ள விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.


கோயில் சாவியை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?


கனிம வளங்கள் அதிகம் இருந்தும், மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசாவின் நிலையைப் பார்த்து வேதனை அடைந்தேன்.


ஒடிசாவின் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜு ஜனதா தள அரசு உள்ளது. முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஒரு சில ஊழல்வாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். பிஜு ஜனதா தள சிறு நிர்வாகிகள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டனர்" என்றார்.


பூரி ஜெகந்நாதர் கோயிலின் கஜானா சாவிகள் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், "எங்கள் சொந்த வீட்டின் சாவி கிடைக்காத போது, ​​ஜெகநாதரிடம் பிரார்த்தனை செய்து, சாவியைக் கண்டுபிடிக்க அவரது ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம். ஆனால், ரத்ன பண்டரின் (கோயில் கஜானா) சாவி ஆறு ஆண்டுகளாக காணாமல் போய்விட்டது.


ரத்னா பண்டரின் காணாமல் போன சாவிகள் பற்றிய விசாரணைக் குழு அறிக்கையின் முடிவுகளை பற்றி ஒடிசா மக்கள் அனைவரும் அறிய விரும்புகின்றனர். ஆனால், பிஜு ஜனதா தளம் அதை அடக்கியுள்ளது. பிஜு ஜனதா தளத்தின் மௌனம் இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தை மேலும் ஆழப்படுத்துகிறது. ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழகத்திற்கு அனுப்பியது யார்?" என்றார்.