சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், பிரதமர் மோடியை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2024 மக்களவை தேர்தல் முடிவுகளானது பாஜகவுக்கு சாதகமாக வரும் என தெரிந்து கொண்டு பிரதமர் மோடியை  அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.


பரப்பப்படும் தகவல்: 2024 மக்களவை தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக காட்சிகள் வெளியாகியுள்ளன.


உண்மை என்ன? பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் சந்திததாக வைரலாகும் காணொளி சமீபத்தியது அல்ல. 2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூன் 12ஆம் தேதி, இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் சந்தித்த காட்சிகள் வீடியோவாக வைரலாகி வருகிறது. 2012 முதல் 2017 வரை உத்தரபிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி வகித்தார். சமீபத்தில், பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, வைரலாகும் தகவல் தவறானது.




வைரல் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை போட்டு கூகுளில் தேடினோம். அண்மையில், பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் சந்தித்தது குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இந்தத் தேடலின் போது, ​கடந்த 2014 ஆம் ஆண்டு, ​ஜூன் 13ஆம் தேதி, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இதே போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவைக் கண்டோம்: “ஸ்ரீ நரேந்திர மோடி உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்” என கேப்ஷனாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சந்திப்பின் புகைப்படமானது, 2014ஆம் ஆண்டு, ஜூன் 12ஆம் தேதி, பிரதமர் அலுவலகத்தின் (PMO) அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டதையும் கண்டோம். அதன் கேப்ஷனில், "உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ அகிலேஷ் யாதவ், ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமரை சந்தித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கூடுதலாக, இந்த சந்திப்பின் புகைப்படத்தை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிர்ந்துள்ளது. வைரலாகும் வீடியோ காட்சிகள், கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூன் 12ஆம் தேதி எடுக்கப்பட்ட காட்சிகளை போன்றே உள்ளது.


பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, "உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் சந்தித்தது போன்று வைரலாகும் வீடியோ சமீபத்தியது அல்ல. 2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.


2024 மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் சந்தித்தது போன்ற பழைய வீடியோ சமீபத்தியது போல் பகிரப்பட்டு வருகிறது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக factly என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுததியுள்ளது.