பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் புதிய விரிவாக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஒருவாரமாக டெல்லியில் முகாமிட்டிருந்த எல்.முருகன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்தார். இதற்கிடையேதான் அவரது பெயர் தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பரிசீலனையில் அந்தக் கட்சியின் அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பாக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், புதிதாக பதவியேற்க உள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியா, சோனாவால், நாராயணன், ரானே, கிஷன்ரெட்டி, பசுபதி குமார் உள்ளிட்டோர் பதவியேற்கின்றனர்.  12 அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி செளபே, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப், கர்நாடாகாவை சேர்ந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்தா கவுடா, சந்தோஷ் சுங்குவார், பாபுல் சுப்ரியோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சாரங்கி, குழந்தைகள் - பெண்கள்  நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, தவார் சந்த் கெலாட் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர்.





பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். பெண்கள், இளைஞர்கள், எஸ்சி 12. எஸ்டி 8, ஓபிசி 27 பேர் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக பாஜகை எம்பிக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்கள்.