தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக மீதும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக, அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‛நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டு குறைந்ததற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தனக்கு பாஜக கூட்டணியால் ஏற்பட்ட இழப்பு குறித்தும் அவர் பேசியிருந்தார். இவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது


இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் எதிர்வினை ஆற்றப்பட்டது பாஜக மூத்த நிர்வாகி கே.டி.ராகவன் தனது ட்விட்டரில் சி.வி.சண்முகத்திற்கு பதிலடி கொடுத்தார்.


 






‛உங்களால் தான்’ என்ற எண்ணம் எங்களுக்கும் உண்டு என்று பதிவிட்ட அவர், சிவி சண்முகத்தின் பேச்சு தொடர்பான நாளிதழ் செய்தியையும் அதில் பகிர்ந்துள்ளார். நேரடியாகவே, அதிமுகவால் தான் பாஜக தோற்றது என முன்னாள் அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டி கே.டி.ராகவன் தெரிவித்துள்ள கருத்து, அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்த நிலையில், மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்-கே.வி.ராகவனின் வார்த்தைப் போர், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.


உட்கட்சி கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியுள்ளதாகவும், வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


இந்நிலையில், கூட்டணி குறித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுத்துவிட்டதால் மற்றவர்களின் கருத்துகளை ஏற்கவேண்டியதில்லை என்றும், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை என கூறுவது சரியல்ல என்றும், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது பாஜக அமைச்சரவைதான் எனவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.


CV Shanmugam press meet : அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம்: சி.வி.சண்முகம்