திமுக தலைவர் முக ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உடனிருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். அது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்ட கமல் "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்" என்றும் கூறினார். 






 


முன்னதாக திமுக வெற்றியை அடுத்து தனது ட்விட்டரில் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்தார். அதில் “நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என கூறியிருந்தார். 






அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்” என கூறினார்.