திமுக வரும் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில்,  அமைச்சர்கள் பட்டியலைதாண்டி யார் ஒட்டுமொத்த சட்டப்பேரவையை கட்டுப்படுத்தும் சபாநாயகராக ஆகப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறைந்தது 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அல்லது அமைச்சராகவும் இருப்பவர்தான் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அப்படி தேர்வு செய்யப்படுபவருக்கு பேரவையின் விதிகள் எல்லாம் அத்துப்படியாக இருக்க வேண்டும். அதேபோல், அனைத்து கட்சி உறுப்பினர்களை அனுசரித்து போகும் பண்புள்ள நபராக இருப்பவரைதான் ஒவ்வொரு கட்சியும் சபாநாயகராக தேர்வு செய்யும்.


அப்படி இந்த முறை திமுக ஆட்சியில் சபாநாயகராக யார் தேர்வாக போகிறார்கள் என்ற பேச்சு எழுந்த நிலையில், அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட மூத்த சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏவுமான துரைமுருகன் பெயர்தான் தொடக்கத்தில் இருந்தே அடிபடத் தொடங்கின.




ஆனால், உதயநிதி அமைச்சரவை அமைந்தாலும் அதிலும் நான் மந்திரியாக இருப்பேன் என சொன்ன துரைமுருகன், நிச்சயம் சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றே விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து பேரவையை நடத்தும் பணிகளில் ஈடுபட அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்பதாலும் சபாநாயகர் பொறுப்பை கொடுத்தாலும் அவர் ஏற்கமாட்டார் என்றே சொல்லப்படுகிறது.


சபாநாயகர் பொறுப்பை ஒருவேளை துரைமுருகன் ஏற்கும்பட்சத்தில் அவர் திமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும். ஏனெனில் கட்சி சார்பற்ற ஒரு நபர்தான் சபாநாயகராக இருக்க முடியும் என்பது  பேரவை விதி.


சரி துரைமுருகன் இல்லையென்றால் வேறு யாருக்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கும் என்று பார்த்தால், கட்சியில் மூத்த நிர்வாகி, 6 முறை எம்.எல்.ஏ, ஒரு முறை அமைச்சர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்று கட்சியினர் வரை தனக்கென தனி செல்வாக்கையும் நற் பெயரையும் கொண்டுள்ள திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான பிச்சாண்டி பெயரை டிக் அடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.




ஏனெனில் வைகோ திமுகவில் இருந்து பிரிந்துபோனபோது 11 மாவட்ட செயலாளர்கள் அவர் பின்னால் சென்றனர். ஆனால், திருவண்ணாமலையில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வைகோவிடம் செல்லாமல் மாவட்ட செயலாளராக இருந்து அப்போது கட்சியை கட்டி காத்தவர்களில் முக்கியமானவராக அறியப்படுவர் பிச்சாண்டி. எனவே பிச்சாண்டி சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை அமைச்சர் பதவியை எதிர்நோக்கி இருப்பவர்களில் பிச்சாண்டியும் ஒருவராக இருந்தாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.வ.வேலுக்கு அமைச்சர் பதவி என்பது ஏற்கனவே முடிவான ஒன்றாக இருக்கிறது. இதே மாவட்டத்தில் பிச்சாண்டிக்கும் அமைச்சர் பொறுப்பை திமுக தலைமை தருமா என்பது கேள்விக்குறிதான். அமைச்சருக்கு பதிலாக அவருக்கு சபாநாயகர் பொறுப்பு தரப்படலாம் என்றே திமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அதேபோல், திமுகவில் மூத்த நிர்வாகியாக இருக்கும் ஈரோடு முத்துசாமி பெயரும் சபாநாயகர் பதவிக்கு பேசப்பட்டு வருகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்துசாமி, 1977, 1980, 1984 தேர்தல்களில் தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்றவர். 1991ல் பவானி தொகுதியில் போட்டியிட்டு வென்று, ஜெயலலலிதா அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருந்தார்.  பின்னர் 2010ல் திமுகவில் இணைந்து 2011 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியிலும், 2016ல் ஈரோடு மேற்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தை வென்றுள்ள முத்துசாமி, சட்டப்பேரவை அவை நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர். அதோடு கட்சியினரிடமும் நன்றாக பழகும் குணம் கொண்டவர் என்பதால் இவரை சபாநாயகராக தேர்வு செய்யலாமா என்று திமுக தலைமை ஆலோசனை செய்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இருவரது அமைச்சரவையிலும் இடம் பிடித்த முத்துசாமி, மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையிலும் இடம் பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.


இவர்கள் இருவரை போன்றே, ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து 6வது முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ள, திமுக கொறாடாவாக இருந்த சக்கரபாணி பெயரும் சபாநாயகர் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.




 


இவர்கள் மூவர் மட்டும் இல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக உள்ள முன்னாள் சென்னை மேயரும் சைதாப்பேட்டை எம்.எல்.ஏவுமான  மா.சுப்பிரமணியன் பெயரும் சபாநாயகர் தேர்விற்கு அடிப்பட்டு வருகிறது.




தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் இருக்கையை இந்த முறை அலங்கரிக்கப்போவது இவர்களில் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.