தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து, அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க.வின் தலைவரும், தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலினின் வீடு ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இதனால், அவர் மயிலாப்பூர் தொகுதியின் வாக்காளராக உள்ளார்.
இதையடுத்து, இன்று காலை 8 மணியளவில் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வாக்களிக்க சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோரும் வாக்களிக்க உடன் வந்திருந்தனர்.
பின்னர், மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் பொதுமக்களுடன் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கையுறை மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. பின்னர், தனக்கான முறை வந்தவுடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர்.
முன்னதாக, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.