நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 158 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முதல்வராவதற்கு கட்சி ரீதியில் ஒருவரை எம்.எல்.ஏ.க்களின் தலைவராக் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதன் அடிப்படையில் இந்த தேர்வு நடந்துள்ளது. 


தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க போகிறது திராவிட முன்னேற்றக் கழகம். வரும் 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறவுள்ள விழாவில் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியலில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.


2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக 176 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கியது. இந்த தொகுதியில் மட்டும் திமுக 41.05 சதவிகித வாக்குகளைப் பெற்றது . அதேபோன்று, 227 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கிய அதிமுக வெறும் 40.78 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. 169 தொகுதிகளில் திமுக- அதிமுக இடையே நேரடி போட்டி இருந்தது.


2021 சட்டமன்றத் தேர்தலில், கிட்டத்தட்ட 130 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக- அதிமுக நேரெதிராக மோதின. இதில், 85 தொகுதிகளில் திமுகவும், 45  இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது.


இந்த 85 தொகுதிகளில், அம்பத்தூர், அரியலூர், ஆம்பூர், சங்கரன்கோவில், மானாமதுரை உள்ளிட்ட 45 தொகுதிகள் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்றெடுத்த தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோன்று, அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியனிடம் இழந்த ஆலங்குளம், புவனகிரி, கூடலூர் , கன்னியாகுமரி,கிருஷ்ணகிரி, மதுராந்தகம் , ஒரத்தநாடு , பரமத்தி - வேலூர், சிங்கநல்லூர் , சீர்காழி , திண்டிவனம் , வேப்பன்ஹள்ளி  உள்ளிட்ட 13 தொகுதிகளை இம்முறை மீண்டும் கைப்பற்றியது.