ஒரு காலத்தில் கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறவேண்டும், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று சொன்னார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்


இந்துக்களுக்கு எதிரானதா திமுக? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் பின்வருமாறு: “நான் பேசியது முழுவதும் யூடியூப்பில் உள்ளது. நான் வேண்டுமென்றால் உங்கள் அனைவருக்கு அந்த வீடியோவை அனுப்புகிறேன். ஏதாவது ஒரு இடத்தில் அந்த வார்த்தையை நான் பேசியிருந்தால் நீங்களே சொல்லுங்கள். அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள், திரிக்கிறார்கள், மாற்றுகிறார்கள். 


சனாதனம் என்றால் என்ன..? எல்லாமே நிலையானது, எதுவுமே மாற்றமுடியாதது என்றுதானே அவர்கள் சொல்லுகிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னார்கள். இப்போது, பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பல்வேறு சாதனைகளை படைக்கிறார்கள்.


ஒரு காலத்தில் கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறவேண்டும், பெண்கள் மேலாடை அணிய கூடாது என்று சொன்னார்கள்.  அதை எல்லாம் மாற்றிக்கொண்டு தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்காக போராடி மக்களுக்கு நல்லதுதானே செய்து கொண்டிருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாமே என்பதுதான் திராவிடம், இதைத்தான் நான் பேசுகிறேன். 


இந்திய பிரதமர் மோடி அவர்கள், ”காங்கிரஸ் முக்த் பாரத் என்று சொல்லுகிறார்கள். அப்படியென்றால் அவர் காங்கிரஸின் கொள்கையை எதிர்கிறார் என்றுதானே அர்த்தம். இதைவிட்டு இருக்கின்ற காங்கிரஸ்காரர்களை அழைத்து கொலையா செய்யப்போகிறார்..? அப்போ அது இனப்படுகொலை என்றால், அப்போ நான் பேசியதும் இனப்படுகொலைதான். 


திமுக ஆரம்பித்ததே சமூகநீதிக்காகதான். எந்தவொரு மதத்திற்கு எதிராகவும் நான் பேசவில்லை. மதத்திற்குள் இருக்கக்கூடிய சாதிய பாகுப்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் திமுக பேசுகிறது” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்” என அண்ணாமலை எக்ஸ் பதிவிற்கு பதில் அளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள் கணவனிடம் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது திராவிட மாடலில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை உணவு திட்டம் பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்துள்ளது.


அனைத்து மதங்கள் குறித்தும் பேசினேன். இந்து மதம் குறித்து மட்டும் பேசவில்லை. பெண்களை அடிமைபடுத்தி கொண்டிருந்தார்கள். படிக்க அனுப்பவில்லை, பேசக் கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன். நான் பேசினால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என பேசும்போதே கூறினேன் ” என்றார்.