அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் கட்சி பொறுப்பு பறிப்பு - திமுக அதிரடி அறிவிப்பு

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த திமுக தலைமை, தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகியோர் வகித்து வந்த கட்சி பதவிகளையும் பறித்துள்ளது.

Continues below advertisement

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வரும் செஞ்சி மஸ்தானின் குடும்ப உறுப்பினர்கள் பலர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் கட்சி பொறுப்பு வகித்து வருகின்றனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் காஜா நசீர் செஞ்சி நகர திமுக செயலாளராகவும், மஸ்தானின் மகன் மொக்தியார் அலி செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராகவும், அவரது மருமகன் ரிஸ்வான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் பொறுப்புகளை வகித்து கொண்டு கட்சியினரை அனுசரித்து செல்லாமல் திமுகவில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Continues below advertisement

இது மட்டுமல்லாமல் அரசு மற்றும் கட்சி பணிகளில் அமைச்சர் மஸ்தானின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு டெண்டர் பணிகளை கட்சியினருக்கு பிரித்து கொடுக்காமல் அனைத்து பணிகளையும் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் குடும்ப உறுப்பினர்களே எடுத்து செய்து வருவது, கள்ளச்சாராய வியாபாரிகளோடு அமைச்சர் மஸ்தானுக்கு தொடர்பு போன்ற அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சை மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனடிப்படையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செஞ்சி நகர திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் காஜா நசீரை அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து அவருக்கு பதிலாக கார்த்திக் என்பவரை நியமனம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்பிறகும் கூட அரசு மற்றும் கட்சி பணிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் குறையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் நகரமன்ற திமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதோடு, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினர் பலரும் அமைச்சர் மஸ்தானுக்கு எதிராக திமுக தலைமையிடம் தொடர்ந்து புகார்களை அளித்து வந்தனர்.  இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த திமுக தலைமை, தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகியோர் வகித்து வந்த கட்சி பதவிகளையும் பறித்துள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலியை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷேக்வாகித் என்பவரை திமுக தலைமை நியமித்துள்ளது. அதேப்போல் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வானை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ரோமியன் என்பவரை திமுக தலைமை நியமித்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பியின் பதவி பறிப்போன நிலையில் தற்போது மகன், மருமகனின் கட்சி பதவியும் பறிபோய் உள்ளதால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் விரக்தி அடைந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் வகித்து வந்த கட்சி பதவிகளை பறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானை ஓரம்கட்டும் நடவடிக்கையில் திமுக தலைமை ஈடுபட்டு வரும் சம்பவம் விழுப்புரம் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement