கடவுளை வணங்கக் கூடாது என நான் சொல்லவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சாமி கும்பிடக்கூடாதா?


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை. அது அவரவர் விருப்பம். சாதி அடிப்படையினறி அனைத்து தரப்பினரையும் முன்பு கோயிலில் அனுமதித்து கொண்டிருந்தீர்களா? திமுக தான் சட்டப்போராட்டம் நடத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என முன்பு அனுமதித்தீர்களா? அந்த உரிமையை பெற்றுக் கொடுத்தது திமுக தான். அதன் தலைவர் கருணாநிதி தான். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறேன். எத்தனை வழக்கு வந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் ” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை


”சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்றால் எதுவும் மாறக்கூடாது, அனைத்தும் நிரந்தரம். ஆனால் மாற்றம் வேண்டும் என்பது தான் திராவிட மாடல். பெண்கள் படிக்கக் கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கூறிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது பாருங்கள் பெண்கள் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறி வந்த நடைமுறையும், மேலாடை அணியக்கூடாது என்று இருந்த நடைமுறைகள் எல்லாம் தற்போது மாற்றப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அடிப்படை உரிமைகளை நாங்கள் போராடி பெற்று தந்துள்ளோம். எல்லாருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட ஆட்சி. திமுக ஆரம்பிக்கப்பட்டதே சமூக நீதிக்காக தான்.  எந்த மதத்திற்கும் திமுக எதிரானது அல்ல. மதத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை ஒழிக்கவே திமுக முயன்று வருகிறது” என உதயநிதி தெரிவித்துள்ளார்.


உதயநிதி விமர்சனமும் - எதிர்ப்பும்: 


கடந்த சனிக்கிழமை அன்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி, ”சனாதன தர்மம் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து சமத்துவமின்மை மற்றும் சமூக அநீதியை ஊக்குவிக்கிறது. இது சமூக முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக உள்ளது” என குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக பேசிய பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என்று உதயநிதி பேசியதாக குற்றம்சாட்டினார். வாக்கு அரசியலுக்காக உதயநிதி பேசுவதாக உள்துறை அமைச்சர் சாடினார். இதேபோன்று,  பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். உதயநிதியை கைது செய்ய வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.