சென்னையில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


“கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். சட்டம் - ஒழுங்கைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு அடிப்படை தார்மீக உரிமைகள் இல்லை. 


10 பேரை தூத்துக்குடியில் சுடும் அளவுக்கு சட்ட ஒழுங்கு யார் ஆட்சியில் சீர்குலைந்து இருந்தது? சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் இரண்டு பேரை அடித்துக் கொன்றார்களே அது யாருடைய ஆட்சியில் நிகழ்ந்தது?


பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்களே பெண்கள், அது யார் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது என்பதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி வசதியாக மறந்துவிட்டு இன்றைய அரசின் சட்டம் ஒழுங்கு குறித்துக் குறைகூறுகிறார்.


 






உள்கட்சி பிரச்சினை தொடர்பாகவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார். தான் தான் அதிமுக என்பதை நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கிறார் பழனிசாமி. ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனுக்களை அளித்திருப்பது நாடகம். மாயத்தோற்றத்தை ஏற்படுத்த பழனிசாமி முயற்சிக்கிறார்.


சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச பழனிசாமிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. கோவை கார் வெடிப்பு வழக்கில் 12 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உண்மையில் வளர்ச்சியை நினைத்து அரசை விமர்சித்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டை பொத்தாம் பொதுவாக முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 


விமர்சனங்கள் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்வதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் உள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் பழனிசாமி தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம்." எனத் தெரிவித்தார்.