அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நட்சத்திர ரீதியாக தனது 59 ஆவது வயது நிறைவடைந்து, அறுபதாவது வயது துவங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் உடனுறை  அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று காலை குடும்பத்தினருடன் உக்ர ரத சாந்தி ஹோமங்கள் செய்து சிறப்பு  வழிபாடு செய்தார். தொடர்ந்து புகழ் பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார்.




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய  டி.டி.வி.தினகரன், “அதிமுக கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அதிமுக கட்சி பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன். தேர்தல் சமயத்தில் பேசிக் கொள்ளலாம். சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது பற்றி எனக்கு தெரியாது” என்றார். மேலும், “டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், மத்தியில் பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். திமுகவின் ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்கள் வருத்தத்தை சந்தித்துள்ளனர். அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் திமுக மோசமான நிலையை சந்திப்பார்கள், வருகின்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும்.




மழை, வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது, திமுக விடியல் ஆட்சியின் அவலங்கள். மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாத்திறம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால் தான் திமுகவிற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். 




எந்த ஊழலாக இருந்தாலும், கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்” என்றார்.


திமுக அமைச்சர்கள் மத்தியில் சண்டை உள்ளதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு? பதில் அளிக்கையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்கள் இடையே சண்டை ஏற்படுகிறது. இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம் என்றார்.


Actress Sripriya: பிரபல நடிகை ஸ்ரீபிரியா தாயார் மரணம்.. இன்று மாலை மயிலாப்பூரில் இறுதிச்சடங்கு!