தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி, ஏற்காடு சாலை, அய்யன் திருமாளிகை மற்றும் அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரசு வீட்டுவசதித் துறை குடியிருப்புகளை ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த அரசு வீட்டுவசதி குடியிருக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள் குறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 



இதன்பின் செய்தியாளரை சந்தித்த தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இன்று காலை சங்ககிரி அரசு வீட்டுவசதித்துறை கட்டிடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்கள் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான அதிகாரிகளிடம் மக்கள் அளித்த கோரிக்கைகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழக அரசு வீட்டுவசதி துறையில் மிகப்பெரிய திட்டங்களை வகுத்து வருவதாக கூறிய அவர், வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை புதிய செயல் திட்டங்களில் மூலம் நடத்தப்பட உள்ளது என்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் அய்யன் திருமாளிகையில் 114 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் 114 வீடுகளும் மக்கள் குடியிருக்க முன்வராததால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை அரசு விற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இது மட்டுமின்றி அரசு குடிசை மாற்று வாரியம் வீடுகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 658 வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை பயனுள்ளதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பிற்கு பின்புறம் உள்ள வீட்டு வசதித்துறை குடியிருப்புகளை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார். 



சேலம் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் ஆலோசனையின்படி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சேலம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு வீட்டுவசதித் துறை குடியிருப்பினை அங்குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினார். அரசு குடியிருப்புகளில் வாடகையை உயர்த்தியதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அரசின் விதிமுறைகளின்படி வாடகை வசூலிக்கப்படுகிறது என்றார். நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.