தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து விவசாய பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டடார். பின்னர் அவர் பேசுகையில், வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக 15 மாவட்ட விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலமாகவும், 7 மாவட்டங்களில் நேரடியாகவும் கருத்து கேட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்படும். விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தாத அளவிற்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருவது தான் இந்த ஆட்சியின் சிறப்பு, 22 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.4,500 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் புதிதாக 1 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மை, விவசாய பொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் உள்ளிட்டவைகளை உள்ளடக்கி கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக 1997 கிராமங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் விவசாயிகள் அதில பலன் அடைவர். சர்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்க ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது கரும்பு விவசாயிகள் கூடுதல் வருவாயை ஈட்டுவார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 180 உழவர் சந்தையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், தமிழகத்தில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் கடலூர் மாவட்டத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும். விவசாயிகள் புளி, காளான், காய்கறி, பூ, பழங்கள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவாயை அதிகரிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிப்பதால் விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், ம.சிந்தனைசெல்வன், புகழேந்தி, சிவக்குமார், அரசுத்துறை செயலர்கள் சமயமூர்த்தி, அண்ணாதுரை, பிருந்தாதேவி, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தி.சு.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மகள்