சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பிரச்சார பேரணியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த வாகன பேரணியானது 13 நாள் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கு சென்று இளைஞரணி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் நிறைவு நாளான நேற்று சேலத்தில் இருசக்கர வாகன பிரச்சார பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து இளைஞர்களுக்கும் சால்வை அணிவித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பாராட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக இருசக்கர வாகன பிரச்சார பேரணியில் இளைஞர்களுடன் சேர்ந்து அமைச்சர் கே.என்.நேரு இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சென்று திமுக இளைஞரணி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்போது அமைச்சர் கே.என்.நேருவுடன் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி இருசக்கரத்தில் பின்புறம் அமர்ந்து சென்றார். இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



இதைதொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்து, 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முக்கியமான காரணமாக அப்போது இளைஞர் அணி தான் இருந்தது. அதன் பின்னர் மூன்று, நான்கு முறை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால், திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக, அச்சுறுத்தும் விதமாக மத்திய அரசு இருந்தாலும் கூட, அதை எதிர்த்து நின்று உரிமைகளை பெறுவோம் என்றும் கூறினார். மேலும் உரிமை மீட்பு போராட்டமாகவும், "நீட் விலக்கு நம்முடைய இலக்கு" என்றும் இளைஞர் அணி செயலாளர் இளைஞரணி சிறப்பாக வழி நடத்தி கொண்டுள்ளார். எனவே திமுக தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற ஆட்சியை நடத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக, திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பதற்கு அனைவரும் பாடுபடுவோம் என்றார். 



திமுகவின் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள், அடக்குமுறைகள் வரலாம். அனைத்தையும் எதிர்த்து நின்று ஆட்சியைக் காப்பாற்றி மாநாட்டை நடத்தி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 என்ற விதத்தில் வெற்றி பெற்று காட்டுவோம். அதேபோன்று அதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதலமைச்சராக, தமிழக முதல்வராக அமர வைக்கின்ற மாநாடாக இருந்த மாநாடு அமையும் என்றும் கூறினார். மேலும் இளைஞரணியினர் நன்றாக உழையுங்கள், வருங்காலத்தில் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கிறது. திமுகவிற்காக உழைப்பவர்கள் நிச்சயம் மிகப்பெரிய பொறுப்பை வந்தடைவார்கள். எனவே அனைவரும் உழையுங்கள் வெற்றி பெறுவோம் என்றும் பேசினார்.