முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் மீது காவல்துறை ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்னொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நட்ராஜ்.


அனுமதியின்றி அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நட்ராஜ் ?


சென்னை பெசன்ட்நகர் கலாசேத்ரா காலனியில் ஏற்கனவே இருந்த தன்னுடைய வீட்டை மறுசீரமைப்பு செய்து, சி.எம்.டி.ஏ அனுமதியின்றி அடுக்குமாடி குடியிருப்பாக அவர் கட்டிவருவதாக புகார் எழுந்துள்ளது.


தமிழக காவல்துறையில் உச்ச  பதவியான HoP எனப்படும் காவல் படை தலைவராக பணியாற்றிய நட்ராஜ், ஓய்வுவிற்கு பிறகு தமிழ்நாடு தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டார். பின்னர், அவர் அதிமுக-வில் இணைந்து மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கிய நட்ராஜ், தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, கல்லூரிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஊக்க உரை நிகழ்த்தி வந்தார். இந்நிலையில்தான், அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதே அவதூறான கருத்துகளை பரப்பியதாக புகார் எழுந்தது.



கட்டப்பட்டு வரும் கட்டடம்


ஆவேசப்பட்ட முதல்வர் – பதியப்பட்ட வழக்கு


திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்துக்கள் ஓட்டுகள் திமுகவிற்கு தேவையில்லை என்று நான் பேசியதாக பொய்யான அவதூறை ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பரப்பியதாகவும் அவர் மீது வழக்கு பதியப்படும் என்றும் தெரிவித்திருந்தார். முதல்வர் பேசிய சில நிமிடங்களில் அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் திருச்சி மாவட்ட காவல்துறை அதிரடியாக வழக்கு பதிவு செய்தது.


புதிய சிக்கலில் முன்னாள் டிஜிபி ?


திமுக ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாக வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் காவல்துறை தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற நட்ராஜை அதே காவல்துறையினர் விரைவில் கைது செய்வார்கள் என்ற தகவல் பரவிவரும் நிலையில், அவர் இன்னொரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


பெசன்ட் நகர் பகுதியில் இருந்த தன்னுடைய வீட்டை சி.எம்.டி.ஏ அனுமதியின்றி, விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்பாக அவர் மாற்றி வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இட நெருக்கடிக்கு இடையே பிற குடியிருப்புவாசிகளுக்கு தொந்தரவு ஏற்படும்படி புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், கட்டட கழிவுகளை தெருக்களிலேயே கொட்டி வருவதால் பாதசாரிகள் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



வழக்கறிஞர் சுகன் புகார்


’புகார் கொடுத்ததற்காக வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்?’


விதிகளை மீறி அடுக்குமாடி கட்டடம் நட்ராஜ் கட்டிவருவதாக கடந்த 2014ஆம் ஆண்டே அவர் வீட்டருகே வசித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை மாநகராட்சியில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அதிமுக ஆட்சி என்பதால் அந்த புகார் மீது அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


புகார் கொடுக்குறியா.. என கேட்டு தாக்குதல்?


நட்ராஜ் மீது புகார் கொடுத்ததற்காக அவரது வீட்டில் ஆர்டர்லியாக பணியாற்றிய 8 போலீசார் சாதாரண உடையில் சுதன் அலுவலகத்திற்கு வந்து, அவரையும் அவர் உடன் இருந்தவர்களையும் லத்தி, கிரிக்கெட் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக சுதன் திருவான்மியூர் காவல்நிலையத்தில் அளித்த தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.




ஆர்டர்லியாக 20 பேர் – பரபரப்பு புகார்


அதேபோல், நட்ராஜ் ஓய்வு பெற்ற பிறகும் அவர் வீட்டில் ஆர்டர்லியாக 20 காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்ததாகவும் அவர்களை வீட்டு வேலை வாங்குவது முதல் பல்வேறு பணிகளுக்கு நட்ராஜ் பயன்படுத்தி வந்ததாகவும் தன்னுடைய புகாரில் சுகன் தெரிவித்திருக்கிறார்


தூசு தட்டும் காவல்துறை – சிக்கலில் நட்ராஜ் ?


ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக நட்ராஜ் மீது திருச்சி காவல்துறை ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வரும் நிலையில், CMDA அனுமதியின்றி சென்னை பெசன்ட் நகரில், நட்ராஜ் அடுக்குமாடி கட்டடம் கட்டி வருவதாக வெளியான புகாரில் இப்போது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நட்ராஜை தொடர்புகொண்டு கேட்டபோது, தான் அனுமதியின்றி கட்டடம் கட்டுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அப்படி ஏதுவும் தான் செய்யவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.