கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கடம்பூர் ராஜூ இன்று பிரச்சாரத்தில் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை. ஜெயலலிதாவுக்கு இயற்கையாகவே உடல்நிலை சரியில்லை. 78 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார. இது ஊரறிந்த உண்மை.

Continues below advertisement


அப்போது முதல்வராக இருந்தது ஓ.பி.எஸ். தான். பல்வேறு விமர்சனங்கள் வந்ததால், வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக தான் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம். முதல்வரோ, அமைச்சர்களோ, கட்சியினரோ இதுவரை யார் மீதும் வீண்பழி சுமத்தவில்லை. ஜெயலலிதாவுடன் சசிகலா ஒன்றாக இருந்து பார்த்துக்கொண்டார் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. அதை தான் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.





எங்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு கூறினால் தான் கவலைப்பட வேண்டும். ஸ்டாலின் எங்களுக்கு பாராட்டு பத்திரமா வழங்குவார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முதல்வர் கையெழுத்திட்டுள்ளார்.


ஸ்டெர்லைட் ஆலையை திறந்தது அவர்கள் தான். அங்கு ஒரு அசம்பாவிதம் நடந்தது. எதிர்பாராதவிதமாக தூண்டிவிடப்பட்டு மக்கள் வம்பாக பலியானார்கள். அது விரும்பதாகாத சம்பவம். அதற்கு என்ன நிவாரணமோ அதனை அரசு செய்தது. உடனடியாக அந்த ஆலையை அ.தி.மு.க. அரசு மூடியது.


ஸ்டாலினின் சொத்து மதிப்பு என்ன காட்டியுள்ளார். அவர் என்ன தொழில் செய்கிறார்? இவ்வளவு சொத்து மதிப்பு காட்டியுள்ளார். கோவில்பட்டியை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதை முதல்வரிடம் வலியுறுத்துவேன். இதனை நாளை இங்கு நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் அவர் அறிவிப்பார். ஒவ்வொரு தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர் தான் தமிழக முதல்வர். இவ்வாறு அவர் பேசினார்.