முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதியின் தி.மு.க வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க நேற்றிரவு திருவண்ணாமலைக்கு வந்த ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் தங்கினார். இன்றைய காலை உணவை அங்கு முடித்த மு.க ஸ்டாலின், இன்று காலை எ.வ.வேலு உள்ளிட்ட 8 வேட்பாளர்களையும் ஆதரித்துப் பேசினார்.


                                                                             


பரப்புரை நடந்துகொண்டிருந்த நேரத்தில் இருந்து, எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தற்போது, இந்தச் சோதனைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. அதிமுக, தோல்வி பயத்தால் பாஜகவைத் தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்யவைக்கிறது. திமுகவை தேர்தல் களத்தில் வெல்லமுடியாது என்பதால் வருமானவரி சோதனை நடத்துகின்றனர். இது ஜனநாயக மரபுக்கு உகந்தது அல்ல, நாகரீகமும் இல்லை” என்று கூறினார்.