எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர். அந்த வகையில் பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அந்த வகையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயம் மணிப்பூர் விவகாரம்தான். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் பெரும் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதுதொடர்பான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர், தொடங்கியது முதலே அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது.
இன்று தொடங்கிய மக்களவை மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் அமலியின் காரணமாக மக்களவை 2 மணி வரையும் மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 4 வது நாளாக மக்களவை முடங்கியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு வரும் நிலையில் அதனை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் இருப்பதை தொடர்ந்த மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் கையில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். தொடர்ந்து, தரையில் அமர்ந்து முழக்கங்களையும் எழுப்பினர். இதில், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.