சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக மூத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார். இந்த நாணய வெளியிட்டு விழாவில் பாஜக மாநில தலைவர், தமிழகத்தை சேர்ந்த மத்திய இணைய அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் திமுக இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யாரையும் அழைக்கவில்லை. திமுக ஆட்சியை காப்பாற்ற கொள்ளவேண்டும் என்ற நிலையில் திமுக அரசு உள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகள் நிறைந்த ஆட்சியாக உள்ளது. அதையெல்லாம் மறைப்பதற்காக மத்தியில் உள்ள ஆட்சியின் தயவு வேண்டுமென்பதற்காகவும் மத்தியில் உள்ள ஆட்சியாளரை அமைத்து நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றி சொன்னால் திமுகவிற்கும் பாஜகவிற்கும் கோபம் வருகிறது. இந்த விழா மாநில அரசாங்கத்தில் விழா அல்ல, மத்திய அரசாங்கத்தால் நடைபெறும் விழா என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் எனக்கு வந்த அழைப்பு மாநில அரசாங்கம் நடத்தும் விழா என்று தான் உள்ளது. இதைப்பற்றி கூட தெரியாமல், விழா நடத்தும் முதல்வராக தமிழக முதல்வர் இருக்கிறார். 



இதுமட்டுமில்லாமல் இதை சொன்னவுடன் பாஜக மாநில தலைவருக்கு கோபம் வந்து என்னைப்பற்றி வசை பாடியுள்ளார். ஏதோ மத்தியில் இருந்து ஆட்சியாளர்கள் வந்து நாணயத்தை வெளியிட்டால்தான் அவர்களுக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் பேசியுள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடந்தபோது அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அதிமுக ஆட்சியில் நாணயம் வெளியிடப்பட்டது. இதை நான் முதல்வராக இருந்தபோது அதிமுக தொண்டனாகவும், முதல்வராகவும் இருந்து வெளியிட்டேன் அதைப்பற்றி சிறுமைப்படுத்தி பாஜக மாநில தலைவர் பேசியுள்ளார். மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் வந்து வெளியிட்டால்தான் எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் பேசியுள்ளார். இது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது


முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்து பணியாற்றியுள்ளார். வரலாறு தெரியாமல் பாஜக மாநில தலைவர் பேசுவது விந்தையாக உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 1984 ஆம் ஆண்டு தான் பிறந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே எம்ஜிஆர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றி, நாட்டு மக்களையும் நன்மதிப்பை பெற்றுள்ளார். இதைப்பற்றி கூட வரலாறு தெரியாமல் உள்ளார். அண்ணாமலை பிறப்பதற்கு முன்பாகவே ஆட்சியில் அமர்ந்த தலைவர் எங்கள் தலைவர் எம்ஜிஆர். அப்போதெல்லாம் உங்கள் தலைவர்கள் எந்த பதவியிலும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று பேசினார்.


திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, அதிமுக என்ற புதிய கட்சி துவங்கி முதலமைச்சராக இருந்தார். அதை மறந்துவிட வேண்டாம் மற்ற கட்சிகளை அடையாளத்தை வைத்து மத்தியில் வெற்றிபெற்று ஆளுகிறவர்கள், எங்கள் தலைவருக்கு பெருமை சேர்க்கின்ற அவசியம் இல்லை என்றார். அதிமுக ஆட்சியில் ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி என்று விமர்சனம் செய்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்து போட்டியிட்டபோது எல்லாம் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினார். சொந்த தொகுதியிலேயே தோற்று விட்டீர்கள். அதிமுக கூட்டணியில் இருந்தபோது, மேலவையில் பல்வேறு மசோதாக்கள் கொண்டு வந்தபோது, நிறைவேற்ற அதிமுக தேவைப்பட்டது. அப்பொழுது நன்றாக இருந்தது. பாஜகவின் உறவை முறித்தபோது அதிமுக கெட்டதாக தெரிகிறது. இதுதான் பாஜகவின் இரட்டை வேடம் என்பது நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன் என்றும் விமர்சனம் செய்தார். காஷ்மீர், ஜார்கண்டில் யார் என்று தெரியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு ஆட்சி செய்து புகழ் பெற்றவர் எம்ஜிஆர் என்றும் கூறினார்.


அதிமுக ஆட்சி வருவதற்கு முன்பாகவே தமிழகத்தில் கடன் இருந்தது. நான் முதலமைச்சராக வந்தபோது 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி தான் கடன் இருந்தது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லை. அப்போதும் கூட விலைவாசி ஏற்றதில்லை, வரிகள் போடவில்லை. பாஜக ஆட்சி 2014 ஆம் ஆண்டு வந்தபோது 55 லட்சம் கோடி தான் கடன் இருந்தது. 2024 பார்க்கும்போது 168 லட்சம் கோடி கடனில் இந்தியா உள்ளது. பத்தாண்டுகளில் 113 கோடி அதிகமாக கடன் வாங்கி உள்ளனர். என்ன திட்டத்தை கொண்டு வந்து கடன் வந்தது. பாஜக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும் விமர்சனம் செய்தார். பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் பேசினார். 500 நாட்களில் 100 திட்டங்களை கொண்டு விடுவேன் என்று பேசினார். எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார் என்று கேள்வி எழுப்பினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவது எல்லாம் பொய் என கடுமையாக விமர்சனம் செய்தார்.



மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலைஞரைப் பற்றி புகழ்ந்து பேசுவது குறித்து உத்தரவு போட்டது என்பது மக்களுக்கு தெரியும். நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தன்மையாக தெரிவித்துள்ளார். திமுகவும், பாஜகவும் தான் நடமாடுகிறார்கள். நாடகத்தை வெளிக்கொண்டு வந்தது திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தான். வெளியில் திமுகவும், பாஜகவும் எதிரி போன்று தோற்றமளிக்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் உறவு வைத்துள்ளனர். திமுகஅரசு மீது ஆளுநரிடம் மூன்றுமுறை பாஜக மனு கொடுத்தது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததால் தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றார். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்கள் வெவ்வேறு மாதிரி வாக்களிக்கிறார்கள்.


விஜய் கட்சியின் பாடலில் மூன்றெழுத்து மந்திரம் என்று எம்ஜிஆர், அண்ணாவின் பேசி உள்ளனர் என்பது குறித்த கேள்விக்கு, எங்கள் தலைவருக்கு கிடைத்த பெருமை என்று நினைக்கிறேன். ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக எங்கள் தலைவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதிமுக கட்சியை அழிக்க முடியவில்லை. அதிமுக தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டால் தான் தங்கள் கட்சியை நடத்தமுடியும், கட்சி தொடங்கமுடியும் என்ற எண்ணத்தில் கூறியிருக்கலாம் என்று தான் நினைக்கிறேன். முழுமையாக நடிகர் விஜய் அரசியல் பணிகளுக்கு வரவில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.


தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் எப்பொழுதும் ஓரம் கட்டப்படவில்லை. திமுக ஆட்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் என்ற பெயரில் பந்தாடபட்டு வருகின்றனர். அதிகாரிகள் நிரந்தரமாக எந்த இடத்திலும் பணி செய்யவிடவில்லை. திறமையான அதிகாரிகளை உரிய துறைகளுக்கு நியமிக்கப்பட்டால் தான், திமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியும் என்றார்.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சிப்பதை மட்டும் தான் வேலையாக வைத்துள்ளார். அனைத்து தலைவர்களும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால் உழைக்காமல் பதவிக்கு வந்த ஒரே தலைவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும்தான். பாஜகவின் முன்னணி தலைவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாஜக மாநில தலைவராக பதவி கிடைத்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடிக்கொண்டு வருகிறார். தன்னை முன்னிலைப்படுத்தி மட்டும் தான் விளம்பரப்படுத்தி வரவேண்டும் என்ற எண்ணம் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உள்ளது என்றும் கூறினார்.


வடமாநிலங்களில் நிதிகள் தாராளமாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்க மறுப்பது ஓரவஞ்சனையாக தான் பார்க்க முடிகிறது தமிழக மக்களுக்கு யார் ஆதரவளிக்கிறார்களோ? அவர்களுக்கு ஆதரவளிப்போம். தமிழக மக்களுக்கு யார் தீங்கு விளைவிக்கிறார்களோ அவர்களை எதிர்ப்போம் என்றார்.


தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கிறது. இதற்கு போதை பொருட்கள் தான் காரணம். எங்கு பார்த்தாலும் கொலை நடைபெறுகிறது. இந்த கொலைகள் நடப்பதற்கு மூலகாரணமே போதைக்கு அடிமையாகி அதன் மூலமாக கொலை நடக்கிறது. இது கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.