சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை காங்கிரஸ் முக்கிய பிரச்னையாக கையில் எடுத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட, இந்த பிரச்னைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தது. அதில், கணிசமான இடங்களில் வென்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் மேற்கொண்ட பிரச்சாரமே காரணம் என சொல்லப்படுகிறது. 


சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்த ராகுல் காந்தி: ஆட்சிக்கு வந்தால் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து வருகிறது . இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் எடுத்துரைத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.


ஒரு தலித்/பழங்குடி கூட மிஸ் இந்தியாவாக வராதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற சம்விதன் சம்மான் சம்மேளன் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "மிஸ் இந்தியாவாக வந்தோரின் பட்டியலை நான் பார்த்தேன்.


"90 சதவீதம் பேருக்கு பிரதிநிதித்துவம் இல்லை"


அதில், ஒரு தலித்தோ ஆதிவாசியோ (பழங்குடியினர்) அல்லது ஓபிசியோ (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கூட இல்லை. சிலர் கிரிக்கெட் பற்றியும் பாலிவுட் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், செருப்பு தைக்கும் தொழிலாளியையோ, பிளம்பரையோ யாரும் காட்டுவதில்லை.


ஊடகங்களில் முன்னணி தொகுப்பாளர்கள் கூட 90 சதவீத மக்கள் தொகையில் இருந்து வருவதில்லை. 90 சதவிகித மக்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியா சிறப்பாகச் செயல்பட முடியாது.


நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பாலிவுட், மிஸ் இந்தியா ஆகியவற்றில் 90 சதவீத மக்கள் தொகையில் இருந்து எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். 90 சதவீதம் பேருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று மட்டும் சொல்கிறேன். அதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.


நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கையை வைத்து நான் நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக கூறலாம்" என்றார்.


10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணி சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், அதுகுறித்த முடிவு எப்போது எடுக்கப்படுகிறதோ அப்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.