தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். 11வது தொடராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்து காண்போம்.


எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மருதூர் கோபாலன் ராமச்சந்திரன், இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர்களான மேலக்காத் கோபாலன் மேனன் மற்றும் மருதூர் சத்தியபாமா ஆகியோர் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். 


இவரது முன்னோர்கள் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் குடியேறினர் என்றும் கூறப்படுகிறது. 2 வயது இருக்கும் போது, தந்தை மறைவையடுத்து கேரளம்  திரும்பினர்.


திரைத்துறையில் எம்.ஜி.ஆர் :


பின்னர் குடும்ப சூழல் மற்றும் வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு வந்தனர். வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, நாடகத்துறையில் சேர்ந்தார். நாடகத்துறையில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த எம்.ஜி.ஆர், 1936 ஆம் ஆண்டு சதி லீலாவதி திரைப்படத்தில் அறிமுகமானார். 1950ல் முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படமான ராஜகுமாரி, எம்.ஜி.ஆருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1954 மலைக்கள்ளன் திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார் எம்.ஜி.ஆர். கருணாநிதியுடனான நட்பு நெருக்கமானது. ( அண்ணா மறைவின் போது, என்னை முதலமைச்சராக்க மிகவும் சிரத்தை எடுத்து கொண்டவர் எம்.ஜி.ஆர், என்று கருணாநிதி கூறியது குறிப்பிடத்தக்கது ) 


Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!


அரசியல்:


ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்த எம்.ஜி.ஆர், 1952 ஆம் ஆண்டு  திமுகவில் இணைந்தார். திரைத்துறையில் வசனம் மற்றும் பாடல் மூலமாகவும் திமுகவின் கொள்கைகளை வெளிப்படுத்தி கட்சிக்கு மேலும் வலு சேர்த்தார். அவரது திரைப்புகழ் பெரிதும் திமுகவுக்கு உதவியது. "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா " போன்ற பாடல்கள் உதாரணம். 


1957 ஆம் ஆண்டு திமுக களம் கண்ட முதல் தேர்தலில் 15 இடங்களில் வென்றது. 


1962 தேர்தலில் 52 இடங்களில் திமுக வென்ற நிலையில், சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


1967 ஆம் ஆண்டு தேர்தலில் பரங்கிமலை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


1971தேர்தலில் மீண்டும் பரங்கிமலை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,  திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 


அ.இ.அ.தி.மு.க. உருவாக்கம்:


1972 ஆம் ஆண்டு கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து வந்தார். பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவரானார். 


1973 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்டது. அதிமுக வேட்பாளரான மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.



 


முதலமைச்சரானார் எம்.ஜி.ஆர்:


1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,அதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. எம்.ஜி.ஆர் அருப்புக்கோடை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த சமயத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். படத்தின் இதர காட்சிகளை முடித்துவிட்டு, வெற்றி பெற்ற 15 நாட்கள் கழித்துதான் ஜூன் 30 ஆம் தேதி  தமிழ்நாட்டின் ஏழாவது முதலமைச்சராகவும், முதல்முறையாக முதலமைச்சராகவும் பதவியேற்றார்.




இரட்டை இலைக்கு எதிராக வாக்கு கேட்ட எம்.ஜி.ஆர்:


இந்த தேர்தலில் ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது. அது என்னவென்றால் இரட்டை இலைக்கு எதிராக எம்.ஜி.ஆர் பரப்புரை மேற்கொண்டார். இரட்டை இலைக்கு எதிராகவா! ஆம் இரட்டை இலைக்கு எதிராகத்தான். அந்த தேர்தலில், ஒரு தொகுதியில் மட்டும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம், சிங்கத்துக்கு வாக்களியுங்கள் என பரப்புரை செய்தார். அந்த தேர்தலில், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டவர் அய்யாசாமி என்பவர்தான். ஆனால், அவருடன் எம்.ஜி.ஆர்க்கு முரண்பாடு ஏற்பட்டு விட்டது.


அவருக்கு அதிமுக தேர்தல் படிவம் வழங்கியதாலும், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டதாலும், அவரை நீக்க முடியவில்லை; அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. இதையடுத்து, எம்.ஜி.ஆர் ஆதரவு வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னம்தான் கிடைத்தது. ஆனால் தேர்தலில் வென்றது இரட்டை இலை, எம்.ஜி.ஆர் ஆதரவு வேட்பாளர் 3வது இடம்தான் கிடைத்தது. இதிலிருந்து சின்னம் எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம்.



இரண்டாவது முறையாக முதலமைச்சர்:


1980 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது, ஆனால், அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்து எம்.ஜி.ஆர் 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.


மருத்துவமனையிலிருந்து வெற்றி:


1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தின்போது, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த தேர்தலில் ஆண்டிபட்டி வேட்பாளராக களம் கண்டு வெற்றியும் பெற்றார். அதிமுக ஆட்சியும் பிடித்தது. 3வது முறையாக முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஒரு கட்சியின் தலைவர் முகத்தை காட்டாமலே வெற்றி பெற்றதை கண்டு பலரும் வியந்தனர். 


முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 நாள் இயற்கை எய்தினார். அதன்பிறகு எம்.ஜி.ஆர்-ஐ அரசியல் ஆசானாக கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அ.தி.மு.க.வை வழிநடத்தி சென்றார்.  இந்தியாவிலே முதல் முறையாக திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து முதலமைச்சரானது, இதுவே முதல் முறை என்ற வரலாற்றை படைத்தார்.




”வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்என்ற அவர் நடித்த பாடலுக்கு ஏற்ப, இன்றும் பல கட்சிகள் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுப்போம் என சொல்கிறபோது நிருபணமாகிறது, இன்றும் அவர் வாழ்கிறார் என்பது.


Power Pages- 2: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?


Power Pages 7: வரி கட்ட முடியாத நிலை! தோற்கடித்த தி.மு.க.வினரே வருந்தியது – காமராஜரின் அரசியல் களம்