மக்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், இன்று (மார்ச்15) மூன்றாவது நாளாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அதாவது மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. அன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் என இரு தரப்பினரும் அமளியில் ஈடுபட்டதால், முதல் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதேபோல் இரண்டாவது நாளிலும், இதை நிலை தொடர்ந்ததால் இரண்டாவது நாளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது நாளான இன்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், இன்றும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்றம் கூடுவதும் உடனே ஒத்திவைப்பதும் தொடர் கதையாகி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் கூட ஒரு நிமிடத்திற்கு மட்டும் 2.5 லட்சம் மக்கள் வரிப்பணம் செலவாகிறது என தரவு கூறுகிறது.
மேலும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தினைச் சுற்றி பேரணி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், ஏற்கனவே அதிகப்படியான காவலர்கள் குவிக்கப்பட்டனர். தற்போது நாடாளுமன்ற வளாகத்தினைச் சுற்றியுள்ள சாலைக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நடத்திய பேரணி இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கியவுடன் டெல்லி காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.
அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவும், அரசியல் நோக்கங்களுக்காக ஆளும் பாஜகவால் மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதை முன்னிலைப்படுத்தவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அலுவலகத்திற்கு அணிவகுத்துச் செல்ல முயன்றனர்.
அணிவகுப்புக்கு முன்னதாக, டில்லி போலீசார் தடுப்புகளை அமைத்து, போராட்டத் தலைவர்களை ED அலுவலகத்திற்குச் செல்வதைத் தடுக்க ஒரு பெரிய குழுவை நிறுத்தினர்.
அவர்களால் முன்னேற முடியாமல் போனதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியை கைவிட்டு நாடாளுமன்றத்துக்குத் திரும்பினர். ED உடன் சந்திப்பை நாடியுள்ளதாகவும், விரைவில் கூட்டு புகார் கடிதத்தை வெளியிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
"அவர்கள் எங்களை இங்கே தடுத்துள்ளனர். நாங்கள் 200 பேர், குறைந்தது 2,000 காவலர்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் குரலை ஒடுக்க விரும்புகிறார்கள். பின்னர் அவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்கள்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கூறினார்.