இந்தியா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதில் மத்திய அரசு உரிமை எடுத்துக்கொள்ள கூடாது என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குறிப்பிட்டார்.






நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கியது. தொடர்ந்து இரண்டு நாட்களாக இரு அவைகளும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மார்ச் 13ஆம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைப்பெற்றது. அதில் சிறந்த பாடலுக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடல் வென்றது. அதேபோல் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை தி எலபெண்ட் விஸ்பெரரஸ் படம் வென்றது.


இந்தியாவிற்கு இரண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. இதற்கு ஏற்கனவே பிரதமர் மோடி, ஜனாதிபதி, தமிழ்நாடு முதலமைச்சர் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் இதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜெகதீப் தன்கர், நாட்டு நாட்டு பாடலும், தி எலபெண்ட் விஸ்பெரரஸ் படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது என கூறினார். மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் தி எலபெண்ட் விஸ்பெரரஸ் படத்திற்கு கிடைத்த விருது இந்திய பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என கூறியிருத்தார். இப்படி அனைவரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



இதில் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே கூறியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், “ இந்த இரண்டு விருதுகளை பெற்றவர்களுக்கு நான் மனமார பாராட்டுகிறேன். இவை தென்னிந்திய படைப்புகள் என்பதால் எங்களுக்கு பெருமையாக உள்ளது. ஆனால் இந்த படத்தை நாங்கள் தான் இயக்கினோம், நாங்கள் தான் இந்த பாடலை எழுதினோம். பிரதமர் மோடி தான் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார் என ஆளும் கட்சி உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. இந்த படைப்புகளில் நமது நாட்டை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருக்கிறது” என கூறினார். இதை சொன்ன உடன் அவையில் இருக்கும் அனைவரும் சிரித்தனர்.